சிவகாசியில் இன்று முதல் பட்டாசு ஆலைகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

பேரியம் நைட்ரேட்டுக்கு தடை விதித்து இருப்பது பட்டாசு தொழிலை முடங்க செய்யும் வகையில் அமைந்துள்ளதாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் வேதனை தெரிவித்துள்ளன.


காற்று மாசு ஏற்படுவதாக பட்டாசு உற்பத்திக்கு பயன்படும் முக்கிய மூலப்பொருளான பேரியம் நைட்ரேட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. பட்டாசு உற்பத்தியில் 80 சதவீத பங்கு பேரியம் நைட்ரேட்டுக்கு உள்ளது.


குறிப்பாக சரவெடி பட்டாசு தயாரிக்க பேரியம் நைட்ரேட் மிக முக்கிய தேவையாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு பட்டாசு தயாரிப்பு சங்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, தாயில்பட்டி, செவல்பட்டி, ஏழாயிரம் பண்ணை, வெம்பக்கோட்டை பகுதிகளில் செயல்படும் பட்டாசு ஆலைகளில் 90 சதவீதம் சரவெடிகள் தான் தயாரிக்கப்படுகின்றன.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் இந்த ஆலைகளில் பட்டாசு உற்பத்தி பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளித்திட வேண்டும்.

பேரியம் நைட்ரேட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டாப்மா) அறிவித்தது.

அதன்படி இன்று (திங்கட்கிழமை) இந்த சங்கத்திற்குட்பட்ட பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தத்தை தொடங்கின. சுமார் 300-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் இங்கு வேலை பார்த்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட்டால் பலவித பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டும் அவை புழக்கத்தில் உள்ளது.

ஆனால் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் தீங்கு செய்யாத சரவெடி மற்றும் பேரியம் நைட்ரேட்டுக்கு தடை விதித்து இருப்பது பட்டாசு தொழிலை முடங்க செய்யும் வகையில் அமைந்துள்ளதாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் வேதனை தெரிவித்துள்ளன.

உலகில் வேறு எங்கும் தடை இல்லாத நிலையில் விருதுநகர் மாவட்டத்திற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பட்டாசு தொழிலை முடக்க முயற்சிக்கும் மத்திய-மாநில, மாவட்ட நிர்வாகங்களை கண்டிக்கும் வகையில் போராட்டத்தை தொடங்கி உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!