அத்தியாவசிய பொருட்களை பற்றாக்குறையின்றி வழங்க அரசாங்கத்துக்கு உத்தரவிடுக – சட்டத்தரணிகள் மனு தாக்கல்

அத்தியாவசிய   பொருட்களை  தடையின்றி வழங்க அரசாங்கத்துக்கு ஆணையிடுமாறு வலிறுத்தி அகில இலங்கை சட்டத்தரிணிகள் சங்கம்  உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்துள்ளது.

இதற்கமைய தேவையான தரப்பினர் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று மக்களுக்குத் தேவையான எரிபொருள், எரிவாயு, மின்சாரம், உணவு, மருந்து மற்றும் பால்மா ஆகியவற்றை உடன் பெற்றுக் கொடுக்க அமைச்சரவை மற்றும் உரிய தரப்பினருக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி அகில இலங்கை சட்டத்தரிணிகள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டினால் நாட்டில் சட்டவாட்சி மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதாக சட்டத்தரணிகள் சங்கம் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.

உடனடியாக இதற்கான தீர்வு காணப்படாவிடில் சட்டவாட்சி மற்றும் பொது அமைதி பாதிக்கப்படுமெனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகில இலங்கை சட்டத்தரிணிகள் சங்கத்தின் தலைவர், உப தலைவர், மற்றும் அதிகாரிகள் இணைந்து இந்த இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர்.

அத்துடன், பற்றாக்குறையின்றி நியாயமான விலைக்கு பொருட்களை வழங்க முடியாமையினால் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டமா அதிபர், அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர், திறைசேரியின் செயலாளர், சில அமைச்சுக்களின் செயலாளர்கள், இலங்கை மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட தரப்பினர் இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் சட்டத்தரணி GG அருள்பிரகாசத்தின் ஆலோசனையின் பிரகாரம், K கனகேஸ்வரன் , ஜனாதிபதி சட்டத்தரணி உதித இதலஹேவா, சட்டத்தரணி சுரேஷ் ஞானராஜ், சட்டத்தரணி புலஸ்திஹேவா மான்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் இந்த மனுக்களுக்கு ஆஜராகவுள்ளனர். 

இதேவேளை, நியாயமான விலைக்கு பற்றாக்குறையின்றி அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொடுப்பதன் ஊடாக சம உரிமை மற்றும் நியாயமான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதாகவும் சட்டத்தரணைிகள் சங்கம் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!