நெருக்கடியில் இருந்து தப்பிக்க நாட்டை பணயம் வைக்கிறது அரசாங்கம்!

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அரசாங்கம் நாட்டுக்கு எதிரான தீர்மானங்களை செயற்படுத்த முயற்சிக்கிறது என முன்னாள் வலுசக்தி துறை அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்தார்.
    
எரிபொருள்,மின்விநியோகம் மற்றும் மருந்து ஆகிய அத்தியாவசிய சேவை கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமைக்கு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பொறுப்புக்கூற வேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் திட்டமிட்ட வகையில் பற்றாக்குறையாக்கப்பட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் நிலைமையினை அவர் தோற்றுவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியினை தீவிரப்படுத்தி நாட்டுக்கு எதிரான தீர்மானங்களை செயற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.அத்தியாவசிய தேவைகளை பெற்றுக்கொள்ள மக்கள் பாரிய சிக்கல் நிலைமைகளை எதிர்க்கொண்டுள்ள நிலைமையில் நாடு மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடு குறித்தும் மக்கள் அவதானம் செலுத்த மாட்டார்கள்.

எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் காலையில் இருந்து இரவு வரை வரிசையில் காத்திருக்கிறார்கள். இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து மக்கள் கவனம் செலுத்தமாட்டார்கள். நாட்டுக்கு எதிரான எதிரான தீர்மானங்களை அரசாங்கம் இரகசியமான முறையில் செயற்படுத்தும்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியினை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஒரு தரப்பினர் நாட்டுக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கத்துடன் சுமுகமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதை நன்கு அறிய முடிகிறது. அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை வெகுவிரைவில் சிதறடிப்போம்.

நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் எவ்வித முன்னேற்றகரமான திட்டங்களையும் இதுவரையில் செயற்படுத்தவில்லை என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!