“உக்ரைனில் ரஷ்யா நடத்திவருவது போர் அல்ல, தீவிரவாதம்” – போலந்து ஜனாதிபதி குற்றசாட்டு!

உக்ரைனில் ரஷ்யா நடத்திவருவது போர் தாக்குதல் அல்ல, தீவிரவாதம் என போலந்து நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா தெரிவித்துள்ளார். உக்ரைனின் மேற்கு மற்றும் மையப் பகுதிகளில் இருந்து ரஷ்ய ராணுவம் பின்வாங்கிய நிலையில், சில நாள்களுக்கு முன்பு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ்வில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரஷ்யாவின் போர் அத்துமீறல்களை பார்வையிட்டார்.
    
இதனை தொடர்ந்து, நேற்று(புதன்கிழமை)பால்டிக் நாடுகளான போலந்து, லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகள் தலைநகர் கீவ்விற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்து போர் நிலவரங்களை கேட்டறிந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா, உக்ரைனில் ரஷ்ய ராணுவம் நடத்தி இருப்பது போர் தாக்குதல் அல்ல, தீவிரவாத வன்முறை என தெரிவித்துள்ளார்.

நாங்கள் இந்த பயங்கரமான செயலை செய்த ராணுவ வீரர்களை பற்றி மட்டும் பேசவில்லை, அதற்கு உத்தரவு பிறப்பித்த அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என தெரிவித்தார். மேலும் ரஷ்யா தற்போது கிழக்கு பகுதியில் தீவிரமான தாக்குதலுக்கு தயாராகி வருவதால் உக்ரைனுக்கு தேவையான கூடுதல் ராணுவ உதவிகளை செய்வது தொடர்பாக சர்வதேச அளவில் அழுத்தம் தர திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய லாட்வியன் ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் உக்ரைனுக்கு தேவையான அனைத்து வகையான ஆயுதங்களையும் உதவுவது எங்கள் கடமை என தெரிவித்துள்ளார்.

எஸ்தோனிய அதிபர் அலார் காரிஸ் பேசுகையில், புடின் இந்த போரில் தோல்வியடைய வேண்டும் இல்லையென்றால் ஐரோப்பாவில் அமைதி இருக்காது என தெரிவித்தார்.

ரஷ்யா போர் குற்றங்களை புரிந்து வருவதாக உலகநாடுகள் குற்றம் சாட்டிவரும் நிலையில் அதனை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் இத்தகைய குற்றசாட்டுகள் உக்ரைன் மேற்கு நாடுகளுடன் இணைந்து போலியான தகவல்களை கூறிவருவதாக தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!