அமைதியான முறையில் போராடும் மக்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாது – ஜனாதிபதி

அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்கும் நாட்டு மக்களின் உரிமைகளுக்கு இடையூறு ஏற்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ  தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், றம்புக்கணை பகுதியில் பதிவு செய்யப்பட்ட சோகத்திற்கு வழிவகுத்த சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், நட்டு மக்கள் வன்முறையினை தவிர்த்து செயற்படுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ குறித்த பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, றம்புக்கணை  பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை நடாத்தப்பட வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் தாம் மிகுந்த வருத்தம் அடைவதாகவும்  பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், றம்புக்கணை போராட்டத்தினை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் அத்துமீறி செயற்பட்டார்களா என்பது தொடர்பில் ஆராயும் வகையில் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி குறித்த குழுவில் பிரதிநிதிகளாக பொது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர், பொது பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சட்ட ஆலோசகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், பொது மக்கள் அமைதியை பேணும் வகையிலும், வன்முறை செயல்களில் இருந்து விலகி செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே, றம்புக்கணை பகுதியில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பொலிஸார் 15 பேர் அடங்குவதாக பொலிஸ் மா அதிபர்
C. D. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில், கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாலர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!