மக்களின் போராட்டம் 1953 ஆம் ஆண்டு ஹர்த்தாலுக்கும் அப்பால் சென்றுள்ளது: டட்லியை போல் கோட்டாபய ராஜினாமா செய்வாரா..!

நாடு முழுவதும் தற்போது நடந்து வரும் மக்களின் எதிர்ப்பு போராட்டங்களானது, 1953 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹர்த்தாலுக்கும் அப்பால் சென்ற போராட்டமாக மாறியுள்ளது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

1953 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹர்த்தாலின் போது பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் சுமார் 11 பேர் கொல்லப்பட்டனர்.

எனினும் தற்போது நடைபெறும் போராட்டங்கள் அந்தளவுக்கு மோசமடையவில்லை. ஆனால், மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருவதில், 1953 ஆம் ஆண்டு ஹர்த்தாலுக்கும் அப்பால் சென்றுள்ள தன்மையை அவதானிக்க முடிகின்றது.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார கஷ்டங்கள் காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.

போராட்டத்தில் வன்முறையான நிலைமைகள் குறைந்து காணப்படுவது நல்ல முன்னேற்றம். மோதல் நிலைமைகள் இன்றி, இப்படியான போராட்டம் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளமையை தான் விரும்புவதாகவும் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

இலங்கையில் 1953 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் ஒத்துழையாமை மற்றும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்திற்கு எதிராக இந்த ஹர்த்தால் நடத்தப்பட்டது.

லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இடதுசாரிகள் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியிலான இந்த போராட்டத்தை நடத்தி இருந்தன. ஒரு நாள் மாத்திரமே நடைபெற்ற இந்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்டனர்.

இந்த போராட்டத்தின் விளைவாக அன்றைய பிரதமர் டட்லி சேனாநாயக்க தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!