பிரான்ஸ் அதிபர் மீது தக்காளி வீச்சு!

பிரான்சில் இம்மாத தொடக்கத்தில் 12-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபரான இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நதாலி ஆர்தாட், நிக்கோலஸ் டூபோன்ட், ஆன் ஹிடால்கோ, யானிக்ஜடோட், ஜீன்லஸ்ஸல், மரைன் லி பென் உள்பட 12 பேர் களமிறங்கினர்.
    
பிரான்சின் அரசியலமைப்பு சட்டப்படி 2 சுற்று தேர்தல் மூலம் அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். முதல் கட்ட தேர்தலில் யாரும் பெரும்பான்மை பெறவில்லை. கடந்த 24-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் இம்மானுவேல் மேக்ரான் 58 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் மேக்ரான் பாரிசின் வடமேற்கில் உள்ள செர்ஜி பகுதியில் உள்ள உணவு சந்தை ஒன்றில் பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அப்போது கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர் அதிபர்மீது குறிவைத்து தக்காளியை வீசினார். இதைக் கண்டு சுதாரித்த பாதுகாவலர்கள் குடையை விரித்து இம்மானுவேல் மேக்ரானை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வணிக சார்பு சீர்திருத்தங்களில் அவர் அழுத்தம் காட்டுவதால் அவருடைய முந்தைய ஆட்சிக் காலத்தில் நடந்தது போலவே தெருப் போராட்டங்கள் மீண்டும் நடைபெறலாம் என்று பலர் கூறுகின்றனர்.