மகிந்த விலகவில்லை என்றால் மக்கள் போராட்டத்துடன் இணைவோம்: அத்துரலியே ரதன தேரர் எச்சரிக்கை

பிரதமர் பதவிக்கு புதிய நபர் ஒருவரின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக எமது மக்கள் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க தயாராகி வருவதாக அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகவில்லை என்றால், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் அவரை பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதமர் பதவி விலகாது விடாப்பிடியாக இருந்து நாட்டை நெருக்கடிக்குள் தள்ள மாட்டார் என நம்புவதாகவும் ரதன தேரர் கூறியுள்ளார். பிரதமர் பதவி விலகவில்லை என்றால், மக்கள் போராட்டத்துடன் இணைந்து செயற்பட நேரிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

கொழும்பு காலிமுகத் திடல் உட்பட நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட அரசாங்கமும், முழு ராஜபக்சவினரும் பதவி விலகிச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

எனினும் ஆளும் கட்சியில் இருந்து விலகி, சுயாதீனமாக இயங்கும் விமல் வீரவங்ச, அத்துரலியே ரதன  தேரர் உள்ளிட்ட தரப்பினர், பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

அத்துடன் மகிந்தவுக்கு பதிலாக புதிய பிரதமரின் தலைமையில், இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரி வருகின்றனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!