இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு விசைப்படகில் வந்த 2 வாலிபர்கள்!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்தது. இதன் காரணமாக இலங்கையில் ஏழைஎளிய மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வாழ வழியின்றி பலர் அங்கிருந்து வெளியேற தொடங்கியுள்ளனர்.
    
அதிலும் முக்கியமாக இலங்கை தமிழர்கள் கடல் வழியாக படகில் தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே பல இலங்கை தமிழர்கள் குடும்பம் குடும்பமாக ராமேசுவரம் தனுஷ்கோடிக்கு படகில் வந்தபடி இருக்கின்றனர்.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து கடந்த 28ந் தேதி வரை தனுஷ்கோடிக்கு 20 குடும்பங்களைச் சேர்ந்த 75 இலங்கை தமிழர்கள் வந்திருக்கின்றனர். தங்களது உடமைகளுடன் வந்து சேர்ந்த அவர்களை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டனர்.

மீட்கப்பட்டவர்களில் ஏராளமான சிறுவர், சிறுமிகளும் அடங்குவர். அவர்களை தவிர மற்ற அனைவரிடமும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் மத்தியமாநில உளவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இலங்கையில் வாழ வழியில்லாமல் தமிழகம் வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

இலங்கையில் இருந்து தமிழர்கள் பலர் குடும்பம், குடும்பமாக வந்தபடி இருந்ததால் இந்திய கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 24 மணி நேரமும் கப்பல் மற்றும் படகில் ரோந்து சுற்றி வந்து கண்காணித்தபடி இருக்கின்றனர்.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள புதுக்குடி பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இலங்கை வாலிபர்கள் 2 பேர் சிறிய ரக விசைப்படகில் நின்று கொண்டிருப்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து அந்த இடத்திற்கு சப்இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், அய்யனார், ஏட்டு இளையராஜா மற்றும் போலீசார் ரோந்து படகில் சென்று அந்த 2 வாலிபர்களையும் மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜெயசீலன் என்பவரின் மகன் சீலன் (வயது 27), எட்வர்டு என்பவரின் மகன் அருள்ராஜ் (34) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் எதற்காக தொண்டி பகுதிக்கு வந்தார்கள்? என்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இலங்கையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், தற்போது அங்கு நிலவும் பொருளாதார நெருக்கடியால் வாழ வழியில்லாமல் தவித்ததன் காரணமாக தமிழகத்திற்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் வந்த படகில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சோதனை செய்தனர். ஆனால் அதில் படகுக்கான ஆவணம் மட்டுமே இருந்தது. மற்றபடி எந்த பொருட்களோ, மீட்கப்பட்ட வாலிபர்களின் உடை உள்ளிட்ட உடைமைகளோ எதுவும் இல்லை.

இதனால் மீட்கப்பட்ட வாலிபர்கள் உண்மையாகவே வாழ வழியில்லாமல் தமிழகம் வந்தார்களா? அல்லது அவர்கள் கடத்தல்காரர்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள் 75 பேரும் படகில் தனுஷ்கோடிக்கே வந்தனர்.

ஆனால் அகதிகளாக வந்ததாக கூறும் இந்த வாலிபர்கள் தொண்டி அருகே உள்ள புதுக்குடி கடல் பகுதிக்கு வந்திருக்கின்றனர். இதனால் அவர்கள் கூறும் தகவல் உண்மை தானா? என்று “கியூ” பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!