ஈராக்கில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் பிரித்தானிய புவியியலாளர்: உதவி கோரும் குடும்பம்!

ஈராக்கில் கடத்தல் குற்றச்சாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் ஓய்வுபெற்ற பிரித்தானிய புவியியலாளருக்கு உதவ அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈராக் சிறையில் உள்ள 66 வயது Jim Fitton என்பவரை மீட்கும் பொருட்டு, மூன்று நாட்களில் சுமார் 100,000 மக்கள் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

Jim Fitton-ன் மகள் லைலா குறிப்பிடுகையில், தமது தந்தையின் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாளும் தமது திருமணமும் ஒரே நாளில் நிகழவிருப்பது தாங்க முடியாது ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.
    
கடந்த இரண்டு ஆண்டுகளாக திருமணத்திற்காக நாள் குறித்து காத்திருந்த நிலையில், தற்போது பேரிடியாக தந்தை தொடர்பில் குறித்த தகவல் வெளியாகியுள்ளதாக லைலா தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய அரசாங்கம் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க மறுத்தால், தமது திருமணத்தில் Jim Fitton கலந்துகொள்ளாமல் போகலாம் என்றார். ஈராக்கில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களைக் கடத்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஃபிட்டன் ஈராக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஈராக்கில் இருந்து பழங்காலப் பொருளை வேண்டுமென்றே ஏற்றுமதி செய்தாலோ அல்லது ஏற்றுமதி செய்ய முயன்றாலோ அது மரண தண்டனை விதிக்க ஏதுவான குற்றமாகும் என கூறப்படுகிறது.

மார்ச் மாதம் முதல் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஃபிட்டன் மீதான வழக்கில் மே 8ம் திகதி தொடங்கும் வாரத்தில் தண்டனை அறிவிக்கப்பட உள்ளது. தற்போது ஃபிட்டனை மீட்கும் மனுவில் அவரது நண்பர்கள், முன்னாள் சக ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் ஆதரவளித்திருப்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்த வழக்கின் அவசரத்தை புரிந்துகொண்டுள்ளதாகவும், ஃபிட்டனின் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறித்து ஈராக் அதிகாரிகளிடம் ஏற்கனவே கவலைகளை தெரிவித்துள்ளோம் என அமைச்சர் Amanda Milling தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!