சீனாவில் உயிரோடு இருக்கும் முதியவரை சடலங்களுக்கான பையில் கொண்டு சென்ற அதிகாரிகள்!

ஷாங்காய் முதியோர் இல்லத்தில் இருந்து வயதான நோயாளி ஒருவர் இறந்துவிட்டதாக நம்பப்பட்டு, சடலம்ஹ்களுக்கான பையில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரம் சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்க்க, மாவட்ட நிர்வாகம் தொடர்புடைய நான்கு அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கியுள்ளது. சவக்கிடங்கு பணியாளர்களாகத் தோன்றும் இரண்டு பேர் சடலங்களுக்கான பையை வாகனத்தில் ஏற்றும் காணொளி ஒன்று ஞாயிறன்று இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த ஊழியர்கள் குறித்த பையை திறந்து பார்க்க, அதில் ஒரு ஊழியர், நோயாளி உயிருடன் இருக்கிறார் என கூறுவது குறித்த காணொளியில் பதிவாகியிருந்தது. குறித்த சம்பவமானது சீனத்து சமூக ஊடகங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, புடுவோ மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் திங்கள்கிழமை இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினர். மட்டுமின்றி, தொடர்புடைய நோயாளி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் ஐந்து அதிகாரிகள் மற்றும் ஒரு மருத்துவர் விசாரணை வட்டத்தில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய நோயாளி குறித்து எவ்வித அடையாளமும் வெளியிடப்படவில்லை.

25 மில்லியன் மக்கள் வசிக்கும் சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காய், தற்போது கொரோனா பரவல் காரணமாக ஆறாவது வாரமாக கட்டுப்பாடுகளில் உள்ளது.

மட்டுமின்றி, பெரும்பாலான மக்கள் எந்த காரணத்திற்காகவும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புகளை விட்டு பலவந்தமாக வெளியே செல்லும் மக்களுக்கும் பொலிசாருக்கும் மோதல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!