பிரித்தானிய ராணியாரின் பிளாட்டினம் ஜூபிலி விழா: இளவரசர் ஹரி- மேகன் தம்பதிக்கு அனுமதி மறுப்பு!

பிரித்தானிய ராணியாரின் பிளாட்டினம் ஜூபிலி விழாவில் இளவரசர் ஹரி- மேகன் தம்பதி உட்பட பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் தொடர்பில் அரண்மனை வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

பிரித்தானிய ராணியாரின் பிளாட்டினம் ஜூபிலி விழாவானது ஜூன் 2ம் திகதி கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒருபகுதியாக முன்னெடுக்கப்படும் விழாவினை பக்கிங்ஹாம் அரண்மனை பால்கனியில் ராணியாரும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களும் திரளான பொதுமக்களுடன் கண்டு களிப்பார்கள்.

 
தற்போது பக்கிங்ஹாம் அரண்மனை பால்கனியில் இடம்பெறும் குடும்ப உறுப்பினர்கள் பட்டியலில் இருந்து இளவரசர் ஹரி- மேகன் தம்பதியுடன் இளவரசர் ஆண்ட்ரூ உட்பட மொத்தம் 30 உறுப்பினர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விழா நாளில் இளவரசர் ஹரி- மேகன் தம்பதி தங்கள் இரு பிள்ளைகளுடன் பிரித்தானியாவில் இருப்பார்கள் என்றே அறிவித்துள்ளனர்.

இதனிடையே, இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியுடன், இளவரசர் ஆண்ட்ரூவும் விலக்கப்பட்டதன் காரணம் அரண்மனை வட்டாரத்தில் இருந்து கசிந்துள்ளது.

அதில், தற்போதைய சூழலில் ஹரி மற்றும் மேகன் தம்பதியை பால்கனியில் காணும் பொதுமக்கள் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் குரல் எழுப்ப வாய்ப்புள்ளதாகவும், அது ராணியாருக்கு மனக்கவலையை ஏற்படுத்தலாம் எனவும், அதனாலையே, இந்த மூவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பின்னர், பக்கிங்ஹாம் அரண்மனை பால்கனியில் இடம்பெறும் குடும்ப உறுப்பினர்கள் பட்டியலை ராணியார் இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாலியல் புகார் வழக்கில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூ பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதுடன், அவரின் மகள்கள் இருவருக்கும் வாய்ப்பளிக்கவில்லை. மேலும், இளவரசி ஆன் குறித்த விழாவில் பங்கேற்பார், ஆனால் அவரது இரு பிள்ளைகளுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!