வங்கதேசத்தில் கோர விபத்து: 38 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

வங்கதேசத்தில் ரசாயன சேமிப்புக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி இதுவரை குறைந்தது 38 பேர் உடல் கருகி பலியாகியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விபத்தில் 300கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் தப்பியுள்ள நிலையில், மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர். வங்கதேசத்தின் முக்கிய துறைமுகமான சிட்டகாங் பகுதிக்கு வெளியே சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள உள்நாட்டு சேமிப்புக் கிடங்கில் சனிக்கிழமை நள்ளிரவு குறித்த பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
    
சம்பவம் தொடர்பில் தகவல் தெரியவந்ததை அடுத்து பொலிசார், தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் தன்னார்வலர்கள், பத்திரிகையாளர்கள் என சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.

பல மணி நேரம் போராடிய பின்னர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். இதில் தீயணைப்பு வீரர்கள் உட்பட சுமார் 300 பேர் படுகாயமடைந்தனர்.

மட்டுமின்றி, முதற்கட்ட தகவலில் ஐவர் மட்டுமே மரணமடைந்ததாக தகவல் வெளியான நிலையில், ஞாயிறன்று பகல் அந்த எண்ணிக்கை 38 என அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காயங்களுடன் தப்பிய பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் 40 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 10 பொலிஸ் அதிகாரிகள் என தகவல் வெளியாகியுள்ளது.

பலருக்கும் 60 முதல் 90% வரையில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் நிலைமை கவலைக்கிடம் என்றே கூறப்படுகிறது. முதல் வெடிவிபத்திற்கு பின்னர் தொடர்ந்து பல வெடிவிபத்துகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

30 ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்த தனியார் கிடங்கில் ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட ரசாயனங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் சம்பவத்தின் போது கிடங்கில் 600 பேர் பணியாற்றி வந்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளனர். சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தானது அருகாமையில் உள்ள கட்டிடங்களின் ஜன்னல்களை நொறுக்கியுள்ளதுடன், 2 மைல்கள் தொலைவில் அதன் தாக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
2012ல், டாக்காவில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 117 தொழிலாளர்கள் மரணமடைந்தனர்.

மேலும், 2013ல் டாக்காவிற்கு வெளியே அமைந்துள்ள ராணா பிளாசா ஆடைத் தொழிற்சாலை இடிந்து விழுந்ததில் 1,100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!