Aeroflotவிமானம் புறப்படுவதற்கான தடையை நீக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை

ஏரோஃப்ளோட் விமான வழக்கை திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரி கொழும்பு வணிக மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

சர்ச்சைக்குரிய ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பாக சட்டமா அதிபர்  இன்று நீதிமன்றில் முன்னிலையாகி குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இதன்படி ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் கட்டுநாயக்க  விமான நிலையத்தில் இருந்து   புறப்படுவதை தடுக்கும் தடையுத்தரவை நீக்குமாறு சட்டமா அதிபர்  கொழும்பு வணிக மேல் நீதிமன்றில்  கோரிக்கை விடுத்துள்ளார்

இந்த நிலையில் குறித்த  வழக்கை நாளை  மறுதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை   தமது  நாட்டு விமானம் தொடர்பாக  இன்று நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்ததன் பின்னர்  விமானத்தை விடுவிப்பதற்கு  எதிர்ப்பார்த்துள்ளதாக  ஏரோப்ளொட்  விமான சேவை நிறுவனம்  இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் Aeroflot விமானம் இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு  தடை விதித்து ,கொழும்பு வணிக மேல் நீதிமன்றம்  கடந்த 3 ஆம் திகதி உத்தரவிட்டது.

அத்துடன்  குறித்த விமானம்  மீதான தடையை நீக்குவதா   இல்லையா என்பது தொடர்பில்  எதிர்வரும் 8 ஆம் திகதி விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக  நீதிமன்றம் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்  நீதிமன்ற உத்தரவுக்கமைய  நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய  ஏரோப்ளொட்   விமானத்தின் பயணிகள் நேற்று மொஸ்கோ ஊடாக நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குத்தகை பிரச்சினை காரணமாக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த விமானத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்த பயணிகள் வேறு விமானங்கள் ஊடாக இவ்வாறு ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சர்ச்சைக்குரிய  Aeroflot   விமான விவகாரம் காரணமாக, இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான வணிக விமான சேவைகளை ரஷ்ய எரோஃப்ளொட் நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!