பிரித்தானியாவில் இந்திய இளம்பெண் சந்தித்த பயங்கர அனுபவம்!

பிரபஞ்ச அழகிப் போட்டியில் பிரித்தானியா சார்பில் இந்திய இளம்பெண் ஒருவர் போட்டியிட தயாராகி வருகிறார். Cheshireஇல் வாழும் அவரது பெயர் ரஜ்னி (Rajnie Kaur Uppal, 25). பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் முன் கம்பீர நடை பயில இருக்கும் ரஜ்னி, சிறிது காலம் முன் வரை வீட்டிற்குள்ளேயே பயந்து பதுங்கிக் கிடந்தவர் என்றால் நம்பமுடியுமா?
    
ஆம், ரஜ்னியை அவரது தோழி ஒருவரின் ஆண் நண்பர் நேரடியாகவும் தொலைபேசி வாயிலாகவும் மிகவும் தொந்தரவு செய்தாராம். பயந்துபோய் ஆறு மாதங்களில் மூன்று முறை வீடு மாற்றிக்கொண்டு ஓடிகொண்டே இருந்த ரஜ்னி, வீட்டை விட்டு வெளியே வராமல் தனது படுக்கையறைக்குள்ளேயே அடைந்து கிடந்திருக்கிறார்.

அப்படி, வீட்டுக்குள்ளேயே பயந்து பதுங்கிக் கிடக்கும்போதுதான் கவிதைகள் எழுதத் துவங்கியுள்ளார் அவர். சமூக ஊடகம் ஒன்றில் வெளியான அவரது முதல் கவிதைக்கே உடனடியாக பெரும் வரவேற்புக் கிடைத்திருக்கிறது.

அதனால், தைரியமான ஒரு பெண்கள் கூட்டம் தன்னுடன் இருக்கிறது என்னும் உற்சாகமும், தைரியமும் கிடைக்க, தொடர்ந்து கவிதைகள் எழுதுவதோடு, மறைந்து கிடந்த அறைக்குள்ளிருந்து வெளியே வந்த ரஜ்னி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பெண்களுக்கு ஆதரவாக சொற்பொழிவுகள் ஆற்றி வருகிறார்.

என்றாலும், இப்போதைய அவரது இலக்கு, அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பிரபஞ்ச அழகிப்போட்டியில் கவனம் செலுத்துவது.

ஒரு பஞ்சாபி சீக்கியப் பெண்ணாக, வெள்ளையர் அல்லாத பெண்கள் சார்பில் அழகிப்போட்டியில் பங்கேற்பதற்காக தான் பெருமிதம் கொள்வதாக தெரிவிக்கும் ரஜ்னி, இதுவரை பிரித்தானியா சார்பில் எந்த இந்தியப் பெண்ணும் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டதில்லை என்கிறார்.
தான் தேர்வு செய்யப்பட்டால், தனக்கு பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண் என்னும் கௌரவம் கிடைக்கும் என்கிறார் ரஜ்னி.

இன்னொரு பக்கம், அவர் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சரி, இல்லையென்றாலும் சரி, அவரை இதுவரை தொந்தரவு செய்த நபர், அவர் இதற்குமுன் பதுங்கியிருந்ததுபோல, அவரது புகழை பதுங்கியிருந்துதான் வேடிக்கை பார்க்கவேண்டியிருக்கும், women power!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!