“ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் எங்களையும் விடுவிக்க வேண்டும்” – வழக்கு தொடர்ந்த நளினி!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை கோரி நளினி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட்ஸ் பயர்ஸ் ஆகிய 7 பேரும் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்தனர்.
   
இதில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்ட நிலையில் அவர் விடுதலையானார். இதனை தொடர்ந்து ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தங்களையும் இவ்வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என நளினியும், ரவிச்சந்திரனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

நளினியின் மனுவில், அரசியலமைப்புக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டிருந்தால் அதை சட்டவிரோதம் என உயர் நீதிமன்றம் அறிவிக்கலாம். ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியதால், மீண்டும் அளுநருக்கு அனுப்பக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று வழக்கு விசாரணை வந்த போது நளினி, ரவிச்சந்திரனை விடுதலை செய்ய உயர்நீதிமன்றமே பரிசீலிக்கலாம் என தமிழக அரசு வாதிட்டது.

இதையடுத்து தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் படி விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!