கோ ஹோம் கோட்டாவை பெரும்பாலானோர் மறந்து விட்டனர்!

கோ ஹோம் கோட்டா என்பதை பெரும்பாலானோர் தற்போது மறந்து விட்டார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஷ சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது விசேட உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
    
பொருளாதார நெருக்கடியினால் நடுத்தர மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளார்கள். அறிவுள்ளோர் நாட்டை விட்டு வெளியேறும் வீதம் நாளுக்கு நாள் தீவிரமடைகிறது.

திறமைசாரிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க அரசாங்கம் நடைமுறைக்கு பொருத்தமான முன்னேற்ற திட்டங்களை செயற்படுத்தவில்லை.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிர்மான கட்டுமாணத்துறையினர்,சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர் வங்கி கடன்களினால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இவர்கள் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

வங்கி கடனை மீள் செலுத்துவதற்கு மேலும் ஒருவருட காலஅவ காசம் வழங்கல்,வட்டி அறவிடலை இடைநிறுத்தல்,கடன் தவணை மறுசீரமைப்பு குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டு பாரிய டொலர் நெருக்கடியினை நாடு எதிர்க்கொண்டுள்ள போது தற்போதும் அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி அத்தியாவசிய பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட வகையில் இடை நிறுத்தப்பட வேண்டும்.
ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் போலியான பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.

1 இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்திக்கான ஒப்பந்தம் நடுத்தர மற்றும் மத்திய வீதி அபிவிருத்தி தரப்பினருக்கு பொறுப்பாக்கப்பட்டது.

ஒப்பந்தகாரர்களுக்கு 64 பில்லியன் நிலுவை தொகையினை அரசாங்கம் இதுவரை செலுத்தவில்லை. கர்ப்பிணி தாய்மார்கள்,தாய்பால் ஊட்டும் தாய்மார்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் குழந்தைகள் மந்தபோசன பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும்.இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளபல்வேறு பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை பிரதமர் கூற வேண்டும் என்றார்.

இதன் போது குறுக்கிட்ட பிரதமர் பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய காலமட்டத்தில் தீர்வு காணும் திட்டங்களை சபையில் அறிவித்துள்ளேன். மருந்த பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு துரிதகரமாக தீர்வு எட்டப்பட்டுள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மருந்துகள் கொள்வனவு செய்யப்படும் என எதிர்க்கட்சி தலைவரை நோக்கி கூறினார் மேலும் நாட்டு மக்கள் கடந்த இரண்டு வருடகாலத்தை மறக்கவில்லை.நினைவில் வைத்துள்ளார்கள்.

செயலிழந்துள்ள கணனியை மீள்திருத்தும் நிலையில் தான் தற்போது நாடு உள்ளது .கடந்த 2வருட காலத்தில் அரசாங்கம் முன்னெடுத்த தன்னிச்சையான தீர்மானங்களே சகல பிரச்சினைக்கும் மூல காரணமாகும் .

ஆகவே மீள் திருத்தம் செய்யும் போது கடந்த இரண்டு வருட காலத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் பிரதமரை நோக்கி குறிப்பிட்டார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!