சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக பெண் ‘சோப்தார்’ நியமனம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல் பெண் ‘சோப்தார்’ நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெண் நீதிபதிகளுக்கான ‘சோப்தாராக’ (செங்கோல் ஏந்தி செல்பவர்) செயல்படுவார்.

அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் கால்பதித்து வருகின்றனர். நீதித் துறையிலும் பல்வேறு பணியிடங்களில் பெண்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சேம்பரில் இருந்து நீதிமன்ற அறைக்குச் செல்லும்போது அவர்களுக்கு முன்பாக ‘சோப்தார்’ எனப்படும் உதவியாளர்கள் வெள்ளைநிற சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து, மரியாதை நிமித்தமாகவும், நீதிபதிகளின் வருகையை உணர்த்தும் விதமாகவும் செங்கோலை ஏந்தியபடி சமிக்ஞை கொடுத்துக் கொண்டே செல்வர்.
    
அத்துடன் நீதிபதிகளுக்கு தேவையான சட்டப் புத்தகங்கள், வழக்கு தொடர்பான கோப்புகளை எடுத்துத் தருவது என நீதிபதிகளின் அன்றாடப் பணிகளுக்கு உதவிகரமாக செயல்படுவார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு சென்னைஉயர் நீதிமன்றத்தில் காலியாக இருந்த 40 ‘சோப்தார்’ பணியிடங்கள் மற்றும் 310 அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு உயர் நீதிமன்றதேர்வுக்குழு மூலமாக எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

அதில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பெண் நீதிபதிகளுக்கு பெண் ‘சோப்தார்’களை நியமிக்கும் வகையில் 20 பெண்’சோப்தார்’கள் தேர்வு
செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் பெண்’சோப்தாராக’ திலானி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளாவின் சேம்பரில் பணியாற்றி வருகிறார். இவரைத் தொடர்ந்து இன்னும் பல பெண் ‘சோப்தார்’கள் நியமிக்கப்படவுள்ளனர்.

ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆண் ‘சோப்தார்’கள் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!