இந்தியாவிடம் கோரப்பட்ட கடன் – மெளனம் காக்கும் டெல்லி!

எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடம் கோரப்பட்ட மற்றுமொரு கடன் தொகை தொடர்பில் இந்திய தரப்பில் இருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
    
இந்தியா தனது முந்தைய கடன் தொகை வழங்கப்பட்டு முடிவடைந்ததை தொடர்ந்து இலங்கை மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைக் கோரியிருந்ததுடன் இதுவரை இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த கடன், எரிபொருள் இறக்குமதிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது. 500 மில்லியன் டொலர்கள் குறித்த இறுதி ஒப்பந்தத்தை எட்டத் தவறினால் எரிபொருள் இறக்குமதி முழுமையாக நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டு உள்ளது.

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் கடனுதவி வழங்குவது குறித்த நெருக்கடிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர விரிசலை உருவாக்கும் வகையில் இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எச்.எம்.சி. பெர்டினாண்டோ மன்னார் அனல் மின் நிலையம் தொடர்பில் அண்மையில் கோப் குழுவில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தாகும்.

அதானி,இந்தியாவினால் நிர்மாணிக்கப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்காக இந்திய பிரதமர் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுத்ததாக முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை இரு நாடுகளிலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது, சில உள்ளூர் குழுக்கள் இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான உணர்வை உருவாக்கி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!