மக்கள் தேவைகளை நிறைவேற்ற அமைச்சரவை பத்திரம் தேவையில்லை,பேச்சிலும் செயல்படுத்துவேன்: அமைச்சர் டக்ளஸ்

எனது மக்களின் தேவைகளை நிறைவேற்ற அமைச்சரவை பத்திரம் தேவையில்லை. அமைச்சரவையில் பேசித் தீர்வு காண்பேன்” என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் காங்கேசன் துறை மற்றும் பலாலி விமான நிலையம் தொடர்பியல் துறைசார் அமைச்சர் விஜயம் தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், “காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலைய செயற்பாடுகள் தொடர்பில் துறை சார்ந்த அமைச்சருடன் பல விடயங்கள் பேசியிருக்கிறேன்.

அதேவேளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் குறித்த விடயம் தொடர்பில் பேசிய நிலையில் இவ்வாறான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 ஆரோக்கியமான கலந்துரையாடல்கள்
மக்களின் பிரச்சினை தொடர்பிலும் தேவைகள் தொடர்பிலும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிதுத்தான் தீர்வு காண வேண்டும் என்பது முக்கியமல்ல ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் மூலம் பிரச்சினையைத் தீர்க்க முடியும்.

தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளிப்படைத் தன்மையுடன் பேச முன்வராமையே தமிழ் மக்களுக்கான தீர்வை எட்ட முடிமாமைக்கான பிரதான காரணம்.

இந்தியா இலங்கைக்கு பலவழிகளிலும் உதவியை செய்து வருகின்ற நிலையில் இந்தியா இலங்கையை பயன்படுத்துகிறதா என்பதை ஆராய்வதை விடுத்து இந்தியாவிடம் இருந்து எமது மக்களுக்கான தீர்வு மற்றும் உதவிகளை பெற வேண்டும்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் 
இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட போது அதனை தமிழ் தலைமைகள் ஒன்று சேர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவாளித்தால் பல பிரச்சினைகளைத் தீர்த்திருக்க முடியும்.
13வது திருத்த சட்டம் தமிழ் மக்களுக்கான தீர்வு என அன்றிலிருந்து இன்று வரை நானே வலியுறுத்தி வந்தேன் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதனை பாதுகாக்க வேண்டும் என கூறி வருகிறது.

தமிழ் மக்களுடைய பிரச்சினையை தீராத பிரச்சினையாக வைத்திருக்க வேண்டும் என சில தரப்புகள் அன்றிலிருந்து இன்றுவரை முயன்று வருகின்றனர் .

மக்களின் பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையிலும் இந்தியாவுடனும் பேசுவதற்கு நான் எப்போதும் தயாராக இருக்கின்ற நிலையில் மக்கள் தமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரிவரப்பயன்படுத்த வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!