தொடர் தொழிற்நுட்ப கோளாறு: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ்!

ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறு குறித்து விளக்கமளிக்க விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த மே 4ம் தேதி சென்னை முதல் துர்காபூர் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், வானில் பறந்துகொண்டிருந்த போது ஆயில் ஃபில்டர் பிரச்னைக் காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதே மே 28 தேதி மும்பை முதல் கோரக்பூர் சென்ற விமானம், 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால், விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.
    
இதேபோல் ஜூன் மாதத்தில் இரு முறையும், ஜூலை மாதத்தில் 3 முறையில் விமானம் பறந்தபோது தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது. அதிலும் ஜூலை 5ம் தேதி ஒரே நாளில், டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து குஜராத்தில் இருந்து மும்பை சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக மும்பையில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த 18 நாட்களில் 8 சம்பவங்கள் ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு, விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், ஸ்பைஸ்ஜெய் விமானம் அடிக்கடி தொழிற்நுட்ப கோளாறு காரணமாக பாதுகாப்பின்றி மீண்டும் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்பைஸ் ஜெட் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி விமான போக்குவரத்து ஆணையரகம் தரப்பில், மோசமான பாதுகாப்பு மேற்பார்வை மற்றும் போதிய பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததே விமானத்தில் கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 2018-19ம் ஆண்டு ரூ. 316 கோடியும், 2019-20ம் ஆண்டு ரூ. 934 கோடியும், 2020-21 ஆண்டு ரூ. 998 கோடியும் இழப்பைச் சந்தித்துள்ளது.

இந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள நோட்டீஸை ட்விட்டரில் பகிந்துள்ளார். அதோடு, பயணிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. பாதுகாப்பிற்கு இடையூறாக இருக்கும் சிறிய பிழைகள் கூட முழுமையாக விசாரிக்கப்பட்டு நிச்சயமாக சரி செய்யப்படும் என்று தரிவித்துள்ளார். இதனால் ஸ்பைஸ்ஜெட் விமானம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!