அனைத்துப் பட்டதாரிகளுக்கும் அடுத்த ஆண்டுக்குள் அரச வேலைவாய்ப்பு

பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று, வேலைவாய்ப்பு பெறாமல் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும், நான்கு கட்டங்களாக அரசாங்க வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று சிறிலங்கா அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்ட அவர்,

“2016 டிசெம்பர் 31 ஆம் நாளுக்கு முன்னர், பட்டம்பெற்ற பட்டதாரிகளுக்கு இரண்டு கட்டங்களாக, இந்த ஆண்டு இறுதிக்குள் வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.

2018 ஜூன் 30ஆம் நாளுக்கு முன்னர் பட்டங்களைப் பெற்ற ஏனைய பட்டதாரிகளுக்கு இரண்டு கட்டங்களாக, அடுத்த ஆண்டில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த வேலை வாய்ப்பில் வெளிவாரி பட்டதாரிகள் புறக்கணிக்கப்படமாட்டார்கள். ஆனால், உள்வாரி பட்டதாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

பட்டதாரிகள் அரச வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பதற்கான வயதெல்லையை அதிகரிக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, பட்டதாரிகள் அரச வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிக்கும் வயதெல்லை 35 இல் இருந்து 45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!