வினாத்தாளில் சாதி குறித்த கேள்வி: வருத்தம் தெரிவித்த பெரியார் பல்கலைக்கழகம்!

வினாத்தாளில் சாதி குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்றது குறித்து வருத்தம் தெரிவித்தது பெரியார் பல்கலைக்கழகம். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பருவ தேர்வு வினாத்தாளில் சாதி குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டங்களை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, சேலம் பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் சர்ச்சை விவகாரத்தில் தவறிழைத்தோர் மீது துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் உயர்கல்வித்துறை உறுதி அளித்திருந்தது.
    
இது தொடர்பாக உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பாடப்பிரிவுக்கு நடத்தப்பட்ட பருவத் தேர்வில் சாதியை குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு ஊடகங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கேள்வி இடம்பெற்றது குறித்து உயர்கல்வித் துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்.

அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை துறை மூலமாக எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வினாத்தாளில் சாதி குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்றது குறித்து வருத்தம் தெரிவித்தது பெரியார் பல்கலைக்கழகம்.
இதுதொடர்பாக முதற்கட்ட விசாரணை இன்னும் நடத்தப்படவில்லை என்றும் முழுமையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், சர்ச்சைக்குரிய வினாத்தாள் தயாரிப்பில் பல்கலைக்கழகத்திற்கு உள்நோக்கமோ, நேரடி தொடர்போ இல்லை என்றும் கூறியுள்ளது. சர்ச்சைக்குரிய வினாத்தாளை பெரியார் பல்கலைக்கழகம் நேரடியாக தயாரிக்கவில்லை என துணைவேந்தர் ஜெகநாதன் விளக்கமளித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!