ரணிலை ஜனாதிபதியாக்க மொட்டு முடிவு!

புதிய ஜனாதிபதி தெரிவிற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உத்தியோகப்பூர்வமாக தீர்மானித்துள்ளதுடன் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெருமவிற்கு ஆதரவு வழங்க போவதில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர கரியவசம் குறிப்பிட்டார்.
    
புதிய ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பின் போது பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள். பாராளுமன்றில் எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள புதிய ஜனாதிபதி தெரிவிற்கு தானும் போட்டியிட போவதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும அறிவித்ததை தொடர்ந்து இந்த தீர்மானம் உத்தியோகப்பூர்வமாக எடுக்கப்பட்டது.

ஜனாதிபதி தெரிவிற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் தானும் போட்டியிட தயார் என டலஸ் அழகபெரும குறிப்பிட்டுள்ளார்.கட்சி என்ற ரீதியில் அவருக்கு ஆதரவு வழங்க தீர்மானிக்கவில்லை.
அரசியல் காரணிகளை விடுத்து பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய பதில் ஜனாதிபதி தலைமையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையினை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் பதில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தீர்மானிக்கப்பட்டது என்றார்.

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றிற்கு தெரிவாகிய முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ‘வெற்றிடமாகியுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் பாராளுமன்ற வாக்கெடு;ப்பில் தானும் போட்டியிட தயார் என குறிப்பிட்டு,சகல பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் கோரியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!