வஜிர அபேவர்தனவுக்கு அமைச்சர் பதவி!

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன எதிர்வரும் 27ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்யவுள்ளார். அதனை தொடர்ந்து அவர் அமைச்சரவை அமைச்சராகவும் பதவி பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
    
ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க கடந்த 20ஆம் திகதி பாராளுமன்றில் இடம் பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக 8ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து கடந்த 21 ஆம் திகதி அவர் ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்ததன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.வெற்றிடமாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் கடந்த வாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவின் பெயர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டதை தொடர்ந்து அதனை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வாரம் வர்த்தமானி அறிவித்ததை வெளியிட்டது.
அதற்கமைய வஜிர அபேவர்தன எதிர்வரும் 27ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.அதனை தொடர்ந்து அவர் அமைச்சு பதவியையும் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து இன்னும் ஓரிரு வாரங்களில் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஜனாதிபதி தலைமையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.30 அமைச்சுக்களை உள்ளடக்கிய வகையில் அமைச்சரவையினை அமைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அத்துடன் சர்வக்கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுக்கும் அமைச்சுக்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!