செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடக்கம்: பிரதமர் மோடி, முதல்வர் பங்கேற்பு!

1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி, 95 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில் நடக்கிறது. அதுவும் தமிழ்நாட்டில், சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று பிரமாண்டமாக தொடங்கியது.

பிரமாண்ட கலை நிகழ்ச்சி

186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டி ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. அதிக வீரர்கள் கலந்து கொள்வதில் சாதனை புரிந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேற்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக, வண்ண விளக்குகள் ஜொலிக்க பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் களிப்படைய செய்தது. அதன் இடையே, போட்டியில் பங்கேற்ற 186 நாடுகளை சேர்ந்த வீரர் – வீராங்கனைகள் தங்கள் நாட்டின் கொடியுடன் அணிவகுப்பு நடத்தினர். சரியாக, மாலை 6.25 மணிக்கு விழா மேடைக்கு பிரதமர் நரேந்திரமோடி வந்தார். அவர் வந்தவுடன் கோலாகலமாக விழா தொடங்கியது. விழாவுக்கு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேசிய கீதம் – தமிழ்த்தாய் வாழ்த்து

மத்திய தகவல் – ஒலிபரப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்குர், மத்திய தகவல் – ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால் வளத்துறை இணை மந்திரி எல்.முருகன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். விழா தொடங்கியதும், முதலில் தேசிய கீதமும், தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. அதன்பின்னர், தமிழக சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு

தொடர்ந்து, பிரதமர் நரேந்திரமோடியை வரவேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாமல்லபுரம் கடற்கரை கோவில் போன்ற சிற்பத்தை நினைவுப் பரிசாக வழங்கினார். அடுத்து, நடிகர் கமல்ஹாசனின் குரல் பின்னணியில், தமிழரின் பெருமை குறித்த வரலாற்று நிகழ்ச்சி இடம் பெற்றது. அதை பிரதமர் நரேந்திரமோடி ரசித்து பார்த்தார். அதனைத் தொடர்ந்து, ”என்ஜாய் எஞ்சாமி” என்ற பாடலுக்கு நடனக் கலைஞர்கள் ஆடினார்கள். அந்த பாடலின் இடையே, தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டது, நாட்டு பற்று உணர்வை தூண்டியது.

மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது

பின்னர், மத்திய இணை மந்திரி எல்.முருகன் உரையாற்றினார். தொடர்ந்து, சர்வதேச செஸ் கூட்டமைப்பு (பிடே) தலைவர் அர்கடி துவார்கோவிச், மத்திய மந்திரி அனுராக் தாக்குர் ஆகியோர் பேசினார்கள். அடுத்து, இந்தியா முழுவதும் சுற்றி வந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சுடரை கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மேடைக்கு கொண்டு வந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். அதை அவரிடம் இருந்து இந்திய செஸ் அணியை சேர்ந்த 3 வீரர்கள் பெற்றுக் கொண்டு, அதன் மூலம் 44-வது செஸ் ஒலிம்பியாட் தீபத்தை ஏற்றி வைத்தனர்.

பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

அதனைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். பின்னர், பிரதமர் நரேந்திரமோடி, கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான ராஜா, ராணி காய்களை அறிமுகம் செய்து 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முறைப்படி தொடங்கிவைத்தார். தொடர்ந்து, அவர் விழாப் பேருரை ஆற்றினார். அத்துடன், விழா நிறைவடைந்தது. விழாவில், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் சவுந்தர்யா, நடிகர் கார்த்தி, கவிஞர் வைரமுத்து மற்றும் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், தயாநிதிமாறன், கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், அவரது மனைவி அருணா, இந்து குழும தலைவர் என்.ராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போட்டிகள் இன்று தொடக்கம்

தொடக்க விழாவான நேற்று செஸ் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணி முதல் போட்டிகள் தொடங்குகின்றன. ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் தொடங்கி இரவு 9 மணி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அதிக வீரர்கள் கலந்துகொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!