நாட்டின் அழிவுக்கு கோட்டாபய மட்டுமல்ல முழு மொட்டுக்கட்சியினரும் காரணம்:எஸ்.எம்.மரிக்கார்

எந்த பிரச்சினைகளும் சிக்கல்களும் இல்லாத நாட்டையே நல்லாட்சி அரசாங்கம், கோட்டாபய ராஜபக்சவிடம் ஒப்படைத்தது எனவும் கோட்டாயவின் தலைமையின் கீழ் நாட்டின் அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்தது எனவும் ஐக்கி மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
வரிசைகள் இல்லாத நாட்டை கோட்டாபயவிடம் ஒப்படைத்தோம்

விவாசாயிகளின் வயல்களுக்கு தேவையான உரம், நோயாளிகளுக்கு மருந்துகள் இருந்த, எரிபொருள் வரிசை, எரிவாயு வரிசை காணப்படாத,அதிகளவில் பணவீக்க அற்ற,மாணவர்கள் தினமும் பாடசாலைக்கு செல்லக்கூடிய நாட்டையே நல்லாட்சி அரசாங்கம் கோட்டாபயவிடம் ஒப்படைத்தது.

அத்துடன் பொருட்களின் விலைகள் உயராத, டொலர் கையிருப்பில் இருந்த நாட்டை அன்று நாங்கள் ஒப்படைத்தோம். நாட்டை தற்போதைய நிலைமைக்கு கொண்டு வந்தது கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோர் மாத்திரமல்ல பொதுஜன பெரமுனவினர் அனைவரும் இதற்கு காரணம்.

ஐக்கிய மக்கள் சக்தி சர்வகட்சி அரசாங்கத்தில் இணையாது

நாடாளுமன்றத்தில் உள்ள பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தனர். இவர்கள் ரணில் விக்ரமசிங்கவின் வாலை பிடித்துக்கொண்டு, அனைத்தையும் கோட்டாபயவே செய்தார் நாங்கள் அல்ல என்று கூறி தப்பிக்க முடியாது.

இதனால், சர்வகட்சி அரசாங்கத்தில் கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவையில் அங்கம் வகித்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அளுத்கமகே போன்றவர்களுடன் அமைச்சரவையில் எங்களுக்கு அமர முடியாது.

இதனால், ஐக்கிய மக்கள் சக்தி எந்த வகையிலும் சர்வகட்சி அரசாங்கத்தில் இணையாது. அமைச்சு பதவிகளை பெறாது, நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது எனவும் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!