கோத்தாவை வேட்பாளராக நிறுத்தவில்லை – மகிந்தவின் ஊடகச் செயலர்

கோத்தாபய ராஜபக்சவை அதிபர் வேட்பாளராக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார் என்று வெளியாகிய செய்திக் குறிப்பை, மகிந்த ராஜபக்சவின் ஊடகச் செயலாளரும், கோத்தாபய ராஜபக்சவும் நிராகரித்துள்ளனர்.

கோத்தாபய ராஜபக்சவை, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அதிபர் வேட்பாளராக நிறுத்த மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார் என்று, நேற்றுமுன்தினம் ஒரு அறிக்கை வெளியானது.

மகிந்த ராஜபக்சவின் பெயரில் வெளியான இந்த ஊடக அறிக்கை பொய்யானது, போலியானது என்று மகிந்த ராஜபக்சவின் ஊடகச் செயலாளர் றொகான் வெலிவிட்ட நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அடுத்த அதிபர் வேட்பாளர் தொடர்பாக மகிந்த ராஜபக்ச எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில், அவர் சிங்கப்பூர் சென்றுள்ள நேரம் பார்த்து இந்த அறிக்கை பரப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, கோத்தாபய ராஜபக்சவும், தனது சமூக ஊடகப் பக்கங்களில் இதனை மறுத்துள்ளார்.

“ முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால், வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் அறிக்கையில், 2020 அதிபர் வேட்பாளராக, என்னுடைய பெயர் இருப்பதாக, சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது முற்றிலும் பொய்யானதாகும்.

மக்களை திசை திருப்பி, குழப்பமான அரசியல் நிலைமையொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகவே, இந்தச் செய்தி அமைந்துள்ளது.

அரசியலில் குழப்பகரமான நிலைமையை ஏற்படுத்துவதற்காக ஒரு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் முயற்சியாகவே இதனை நான் பார்க்கின்றேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!