பிளஸ் 2-தேர்வு எழுத ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்ற 50 வயது பெண்

கேரள மாநிலத்தில் முதியோர் கல்வி திட்டத்தில் ஏராளமான வயது முதிர்ந்த பெண்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இதில் காட்டுதுருத்தி பகுதியை சேர்ந்த 50 வயதான சிமி மோள் என்ற பெண்ணும் பிளஸ் 2-வுக்கு சமமான கல்வி பயின்று வந்தார். இதற்கான தேர்வு கடந்த 14-ந் தேதி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது. தேர்வுக்கு சில நாட்களே இருந்த நிலையில் சிமி மோளுக்கு கடுமையான மூச்சு திணறல் நோய் ஏற்பட்டது. இதற்காக அவரை உறவினர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. என்றாலும் அவர் பிளஸ் 2-தேர்வை எழுதியே தீருவேன் என உறவினர்களிடம் கூறினார்.

இதையடுத்து அவரது உறவினர்கள் கடந்த ஞாயிற்றுகிழமை, சிமிமோளை, ஆக்சிஜன் உதவியுடன் தேர்வு அறைக்கு அழைத்து சென்றனர். அவரது நிலைமையை பார்த்த தேர்வு அதிகாரிகள், சிமி மோள் தேர்வு எழுத தனி அறை ஒதுக்கி கொடுத்தனர். அங்கு அவர் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் தேர்வு எழுதினார். நோய் பாதிப்பு இருந்த பின்பும் முழுமையாக அவர் தேர்வை எழுதி முடித்தார். இதற்காக அவரை முதியோர் கல்வி திட்ட அதிகாரிகள் பெரிதும் பாராட்டினர். தேர்வு முடிந்த பின்பு சிமிமோளை உறவினர்கள் ஆம்புலன்சில் ஏற்றி மீண்டும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுபற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பரவி பாராட்டை குவித்து வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!