சர்வதேச நாணய நிதிய பிணையெடுப்புக்காக உச்சக்கட்ட முயற்சியில் இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்புக்காக இலங்கை அரசாங்கம் பாரிய முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளது. இதில் ஒரு கட்டமாக சீனாவிடம் இருந்து பெற்ற கடன்களை சீரமைப்பதற்கு அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியிலும், சீன கப்பலை அம்பாந்தோட்டைக்குள் அனுமதிக்கும் முடிவை இலங்கை எடுத்திருந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு கடனை இறுதி செய்யும் நோக்கத்துடன் இலங்கை மேற்கத்திய நாடுகளுக்கு சர்வதேச இறையாண்மை பத்திர கொடுப்பனவுகளாக அதிக கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையிலும் உள்ளது.

இதில் சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் (ஐ.எஸ்.பி) வடிவில் இலங்கை அரசாங்கம், பிளாக்ராக் (அமெரிக்கா), அஸ்மோர் குரூப் (பிரிட்டன்), அலையன்ஸ் (ஜெர்மனி), பி.எஸ் (சுவிட்சர்லாந்து), எச்.எஸ்.பிசி (பிரித்தானியா), ஜே.பி மோர்கன் சேஸ் (அமெரிக்கா) மற்றும் ப்ருடெனில் (அமெரிக்கா) ஆகிய நிறுவனங்களிடம் இருந்து கடன்களை பெற்றுள்ளது.

இதேவேளை சர்வதேச நாணய நிதிய பணியாளர் உடன்படிக்கையின் பின்னர் வரி விகிதங்களை அதிகரிப்பது, வருமான வரி வரம்புகளை குறைப்பது, வெட் வரியை அதிகரிப்பது, சுயாதீன கடன் அலுவலகம் அமைப்பது, அதிக வட்டி விகிதத்தைத் தொடர்வது போன்ற முக்கிய கொள்கை முடிவுகளை அரசாங்கம் எடுக்கவுள்ளது.

அத்துடன் எரிபொருள் விலை சூத்திரம், மின்சார விலை சூத்திரம், மின் கட்டண அதிகரிப்பு, பணவியல் சட்டத்தை ரத்து செய்தல், இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது மற்றும் வங்கி ஒழுங்குமுறை அமைப்பில் அரசியல் தலையீடுகளை குறைக்க மத்திய வங்கி யோசனையை நிறைவேற்றுவது போன்ற பல கொள்கை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!