மீறல்களுடன் தொடர்புபட்டவர்களை சர்வதேச நீதிமன்றக் கட்டமைப்பில் நிறுத்த முயற்சி!

இலங்கையில் கடந்த 2009 மே மாதம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட போரின்போது நிகழ்த்தப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான மீறல்களுடன் தொடர்புபட்டவர்களை சர்வதேச நியாயாதிக்கத்தின் பிரகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு போன்ற சர்வதேச நீதிமன்றக் கட்டமைப்பொன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான சாத்தியப்பாடு தொடர்பில் புலம்பெயர் தமிழர்களுடன் சட்டத்தரணிகள் சிலர் இணைந்து ஆராய்ந்து வருவதாக பிரித்தானியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

    
இதுகுறித்து பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ‘இது செயற்படவேண்டிய நேரமாகும்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் முக்கிய விடயங்கள் வருமாறு: அண்மையகாலத்தில் ஆட்சியாளர்களுக்கு எதிரான சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியானது சுமார் 3 தசாப்தகாலத்திற்கும் மேலாக தமிழ்மக்களால் முன்னெடுக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத்தை நினைவுறுத்துகின்றது.

இருப்பினும் கடந்த 2009 மேமாதம் தமிழ் மக்கள் அவர்களின் சுதந்திரப்போராட்டத்தை முடிவிற்குக்கொண்டுவருவதற்கு நிர்பந்திக்கப்பட்டார்கள்.நாட்டிற்குள் பல்வேறு வழிமுறைகளிலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரச பயங்கரவாதத்தின் விளைவாக அடக்குமுறைகள் மேலோங்கும்போது, தமிழர்களால் நாட்டினுள் அவர்களது குரலை மீட்டெடுக்க முடியவில்லை. இருப்பினும் தற்போது தமிழர்களின் போராட்டம் நன்கு முதிர்ச்சியடைந்திருக்கின்றது. குறிப்பாக இப்போது அது பெருமளவிற்கு அரசியல் மற்றும் சட்டரீதியானதாக இருப்பதுடன் சர்வதேச செயற்திட்டமொன்றுக்கு உட்பட்டதாகக் காணப்படுகின்றது.

கடந்த 2009 மேமாதம் தமிழ்மக்களின் குரல்கள் அமைதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து பல்வேறு சர்வதேசப்பிரகடனங்கள் மற்றும் சட்டங்களை மீறியமைக்காக இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கான பிரசாரத்தை ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பொதுக்கட்டமைப்புக்களிலும் முன்னெடுக்க ஆரம்பித்தனர்.
புலம்பெயர் தமிழர்களின் விடாமுயற்சியினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள் தொடர்பில் கவனம்செலுத்தியது.

அதன் தொடர்ச்சியாக பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் சில தீர்மானங்களும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன. இவ்வாறானதொரு பின்னணியில் குற்றமிழைத்த நபர்களை சர்வதேச நியாயாதிக்கத்தின் பிரகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு போன்ற சர்வதேச நீதிமன்றக்கட்டமைப்பொன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான சாத்தியப்பாடு தொடர்பில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஆராய்ந்து வருகின்றன.

அதற்காக சில சட்டத்தரணிகள் தாமாகவே முன்வந்து ஒன்றிணைந்திருக்கின்றார்கள். இவ்விடயத்தில் இலங்கைவாழ் தமிழ்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டியது அவசியமானதாகும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!