இலங்கையின் இறையாண்மை மீதான எந்த தலையீடும் ஏற்றுக்கொள்ள முடியாது!

வெளிநாடொன்றின் கப்பலை அதன் கோரிக்கைக்கு அமைவாக அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்குள் அல்லது வேறு துறைமுகத்திற்குள் அனுமதிப்பது என்பது தமது இறையாண்மைக்கு அமைவாக முற்றுமுழுதாக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமேயாகும் என இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் சுட்டிக்காட்டியுள்ளார்.
  
அதுமாத்திரமன்றி அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவிருப்பதுடன் இதன்போது பெரும்பாலும் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் மீண்டும் பேசுபொருளாகக் கூடும்.இலங்கை மக்கள் இன்னமும் மிகப்பாரிய பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்ற தற்போதைய சூழ்நிலையில், எப்போதும் மனித உரிமைகள் தொடர்பில் உபதேசம் செய்கின்ற நாடுகள் எத்தகைய உதவிகளை வழங்கின என்று பலரும் எண்ணிப்பார்க்கக்கூடும்.

அவர்கள் (அந்த நாடுகள்) அவசியமான ஆதரவை வழங்குவதன் மூலம் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் முன்னேற்றமடைவதற்கு உதவுவார்களா? அல்லது அவர்கள் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தொடர்ந்து தலையீடு செய்வதற்கான ஓர் மறைமுகக்கருவியாக மனித உரிமைகளைப் பயன்படுத்துவார்களா? என்றும் சீனத்தூதுவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அண்மையகால இராஜதந்திர விவகாரங்களை அடிப்படையாகக்கொண்டு மிகவும் காட்டமான முறையில் வெளியிட்டுள்ள கட்டுரையொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

அண்மைய சில நாட்களில் இலங்கையில் சீனா தொடர்பான இரண்டு செய்திகள் பரவலாகப் பகிரப்பட்டுவருவதனை அவதானிக்க முடிகின்றது.இம்மாதத்தொடக்கத்தில் அமெரிக்க சபாநாயகர் நான்ஸி பெலோஸி சீனாவின் தாய்வான் பிராந்தியத்திற்கு மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து, சீனா அதற்கு எதிரான நடவடிக்கைகளுடன்கூடிய பிரதிபலிப்பை உடனடியாகக் காண்பித்தது.
அதுமாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் சுமார் 170 நாடுகள் ‘ஒரே சீனா’ கொள்கைக்கு தமது வலுவான ஆதரவை வெளிப்படுத்தியதுடன் அமெரிக்காவின் தூண்டுதலுக்குக் கடும் எதிர்ப்பையும் வெளிக்காட்டின.

அதேவேளையின் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இலங்கையிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சீனாவிற்கு ஆதரவாக நீதியை வலியுறுத்தி வெளிப்படையாகப் பேசியமைக்கு நான் நன்றிகூறுகின்றேன். இருப்பினும் இம்மாத நடுப்பகுதியில் சீனாவும் இலங்கையும் மூன்றாம் தரப்பினரின் முரட்டுத்தனமானதும் நியாயமற்றதுமான தலையீட்டை முற்றுமுழுதாக எதிர்த்ததுடன், இலங்கை அரசிடமிருந்து அனுமதிபெற்றதன் பின்னர் சீனாவின் அறிவியல் ஆய்வுக்கப்பலான ‘யுவான் வாங் 5’ அம்பாந்தோட்டைத்துறைமுகத்தில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது.

இவ்விரு விடயங்களும் எவ்வகையிலும் தொடர்புபடாத, பல மைல்களுக்கு அப்பாலுள்ள வெவ்வேறு விடயங்களாகத் தென்பட்டாலும், அவ்விரு விடயங்களும் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்றன.அதாவது இருநாடுகளும் பரஸ்பரம் இருநாட்டினதும் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் சுயாட்சி ஆகியவற்றை கூட்டிணைந்து பாதுகாக்கவேண்டும் என்பதே அதுவாகும். அத்தோடு அவ்விரு விடயங்களினதும் நடைமுறை மற்றும் முடிவு என்பன சுமார் 65 வருடங்களுக்கு முன்னதாக சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்ட பரஸ்பர இராஜதந்திரத்தொடர்புகளின் சீரான பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

சீனாவும் இலங்கையும் பரஸ்பர அக்கறைக்குரிய விடயங்களிலும் முக்கிய கரிசனைக்குரிய விவகாரங்களிலும் ஒன்றுக்கொன்று புரிந்துணர்வுடனும் கௌரவத்துடனும் ஒத்துழைப்புடனும் செயற்பட்டுவந்திருக்கின்றன. கடந்த 1971 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 26 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை மற்றும் மேலும் 22 நாடுகளின் இணையனுசரணையுடன் 2758 ஆம் இலக்கத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் அதன்மூலம் ‘ஒரே சீனா’ என்ற கொள்கை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே நான்ஸி பெலோஸியின் தாய்வானுக்கான விஜயமானது ‘ஒரே சீனா’ கொள்கைக்கு முற்றிலும் முரணானதாகும். இது சீனாவின் இறையாண்மை மற்றும் சுயாட்சி என்பவற்றைக் கேள்விக்குட்படுத்துவதுடன் தாய்வானின் அமைதி மற்றும் உறுதிப்பாடு என்பவற்றையும் சீர்குலைக்கின்றது.

இலங்கையின் வரலாற்றை எடுத்துநோக்குமிடத்து, அதன் வடக்கிலுள்ள அயல்நாட்டினால் 17 முறை நிகழ்த்தப்பட்ட படையெடுப்புக்களையும் மேற்குலகத்தின் 450 வருடகால காலனித்துவ ஆட்சியையும் பயங்கரவாதத்திற்கு எதிரான 3 தசாப்தகாலப்போரையும் கடந்து இப்போதும் அந்த நாடு உலகின் முன்னிலையில் மிகுந்த துணிச்சலுடனும் பெருமிதத்துடனும் தலைநிமிர்ந்து நிற்கின்றது. இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் சுயாட்சி மீதான எந்தவொரு தலையீடும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாததாகும். வெளிநாடொன்றின் கப்பலை அதன் கோரிக்கைக்கு அமைவாக அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்குள் அல்லது வேறு துறைமுகத்திற்குள் அனுமதிப்பது என்பது தமது இறையாண்மைக்கு அமைவாக முற்றுமுழுதாக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமேயாகும்.

ஆனால் எவ்வித ஆதாரங்களுமின்றி ‘பாதுகாப்புசார் கரிசனைகள்’ என்று கூறிக்கொண்டு வெளியகத்தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட இடையூறுகள் இலங்கையின் இறையாண்மை மற்றும் சுயாதீனத்தன்மைமீது ஏற்படுத்தப்பட்ட தலையீடு என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இருப்பினும் சீனா மற்றும் இலங்கையின் கூட்டிணைந்த முயற்சியால் இந்த விவகாரம் சீராகத் தீர்க்கப்பட்டதுடன் அது இலங்கையின் இறையாண்மை மற்றும் சுயாதீனத்தன்மை ஆகியவற்றை மாத்திரமன்றி சர்வதேச நியாயத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றையும் பாதுகாத்துவிட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவிருப்பதுடன் இதன்போது பெரும்பாலும் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் மீண்டும் பேசுபொருளாகக்கூடும்.

இலங்கை மக்கள் இன்னமும் மிகப்பாரிய பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்ற தற்போதைய சூழ்நிலையில், எப்போதும் மனித உரிமைகள் தொடர்பில் உபதேசம் செய்கின்ற நாடுகள் என்ன செய்தன என்று பலரும் எண்ணிப்பார்க்கக்கூடும். அவர்கள் அவசியமான ஆதரவை வழங்குவதன் மூலம் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் முன்னேற்றமடைவதற்கு உதவுவார்களா? அல்லது அவர்கள் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தொடர்ந்து தலையீடு செய்வதற்கான ஓர் மறைமுகக்கருவியாக மனித உரிமைகளைப் பயன்படுத்துவார்களா? என்று அவர் அவ்வறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!