பாதுகாப்பு கரிசனைகளை கையாள புதிய கட்டமைப்பு அவசியம்!

சீனாவின் கண்காணிப்பு கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கு இலங்கை அனுமதித்தமை குறித்து இந்தியா அதிருப்தியடைந்துள்ளது என்பதற்கான அறிகுறிகளிற்கு மத்தியில் எதிர்காலத்தில் கடல்சார் பாதுகாப்பு கரிசனைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த புதிய கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    
எரிபொருள் மீள்நிரப்புதல் முடிவடைந்த பொருட்களை மீள நிரப்புதல் ஆகியவற்றை பூர்த்தி செய்த பின்னர் அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் புறப்பட்டு சென்ற மறுநாள் இந்துவிடம் கருத்து தெரிவிக்கையில் இந்த சர்ச்சை காலம் முழுவதும் கொழும்பு உயர்மட்டங்கள் மோடி அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக தகவல்களை வழங்கிவந்தது என தெரிவித்துள்ளார்.

சீன கப்பல் விவகாரம் தொடர்பில் உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளமைக்கான அறிகுறியாக இலங்கைக்கு செல்லும் இந்தியர்களிற்கு பயண ஆலோசனையை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள இந்தியாவின் வெளிவிவகார அமைச்சு கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ள இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்து இந்திய பிரஜைகளை எச்சரித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் பயண ஆலோசனை குறித்து எதனையும் குறிப்பிடாத இலங்கை தூதுவர் இருநாடுகளின் உறவுகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்கவேண்டியது அவசியம் என குறிப்பிட்டார்.

குறிப்பாக பொருளாதாரம் மற்றும் மூலோபாய விடயங்களில் இந்தியா இலங்கைக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என அவர் தெரிவித்தார்.
கடன்வசதிகள் உட்பட 3.8 பில்லியன் டொலர் பொருளாதார உதவிக்கு அப்பால் இந்தியாவும் இலங்கையும் அதிகளவு வர்த்தக உறவுகள் மீள்புதுப்பிக்கதக்க வலுச்சக்தி துறைகள் தொடர்பான உட்கட்டமைப்பு திட்டங்கள் எண்ணை சேமிப்பு திட்டங்கள் குறித்து கவனம் செலுத்துகின்றன.
சர்வதேச நாணயநிதியத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தைக்கும் இந்தியா ஆதரவளித்துள்ளது.

சீனா கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நி;ன்றமை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு விவகாரமாக மாறியுள்ளது என்பது குறித்து எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ள மிலிந்த மொராகொட எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகளை தவிர்ப்பதற்கான கட்டமைப்பை எவ்வாறு உருவாக்குவது என்பதே தற்போதுள்ள கேள்வி என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விவகாரங்கள் நம்பிக்கை குறைவடைவதற்கு அனுமதிக்ககூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கை உறவுகளில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்ற போதிலும் இலங்கை இருநாடுகளிற்கு இடையிலான உறவுகளில் சமநிலையை கட்டியெழுப்ப விரும்புகின்றது –உறவுகளில் எந்தவித ஆச்சரியமும் இருக்காது என தெரிவித்துள்ளார்.

முற்றிலும் வழமைக்கு மாறான பகிரங்க நடவடிக்கையாக கடந்த மாதம் மோடி அரசாங்கம் செய்மதி ஆராய்ச்சி கண்காணிப்பு கப்பல் என நம்பப்படும் சீன கப்பலிற்கு இலங்கையில் தரித்து நிற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறித்து மோடி அரசாங்கம் தனது கரிசனையை வெளியிட்டிருந்தது.
இந்தியாவின் எதிர்ப்பின் பின்னர் இலங்கை அரசாங்கம் கப்பலின் வருகையை பிற்போடுமாறு வேண்டுகோள் விடுத்த போதிலும் சீன அரசாங்கம் அதனை சிலநாட்கள் தாமதிக்க மாத்திரம் இணங்கியது.

இறுதியில் அந்த கப்பல் 16 ம் திகதி முதல் 22 ம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நின்றது. இலங்கையில் அரசியல் குழப்பம் நிலவிய காலப்பகுதியிலேயே கப்பலிற்கு அனுமதி வழங்கப்பட்டது என் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இந்த கப்பல் விவகாரத்தில் கப்பலின் வகைகள் மற்றும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை அடையாளப்படுத்துவதில் கொழும்பில் குழப்பங்கள் காணப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள மிலிந்தமொரகொட துரதிஸ்டவசமாக அனுமதி வழங்கப்பட்டதும் அதனை மீளப்பெறுவது கடினமான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்பாடல்கள் உயர்மட்டதகவல் பரிமாற்றங்கள் மக்களிற்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபேயின் இறுதிநிகழ்விற்காக ஜப்பான் செல்லவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த வாரம் குஜராத்திற்கான விஜயத்தின்போது இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன்பெர்ணாண்டோ அதிகளவு இந்திய சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்கான முயற்சிகளி;ல ஈடுபட்டார்.

பத்து இலட்சம் இந்திய சுற்றுலாப்பயணிகளாவது இந்த வருடம் விஜயம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.எனினும் புதன்கிழமை எச்சரிக்கை கலந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் இலங்கையில் இருக்கும் போது அனைத்து இந்தியர்களும் எச்சரிக்கையுடன் அவதானமாகயிருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!