ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வில் இலங்கை பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை தாங்கவுள்ள அலி சப்ரி

சுவிட்சர்லாந்து – ஜெனீவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வில் இலங்கை பிரதிநிதிகள் குழுவுக்கு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்கவுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரையில் இந்த அமர்வுகள் நடைபெறவுள்ளன.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை குறித்த அமர்வொன்றில் அமைச்சர் அலி சப்ரி அறிக்கையொன்றையும்  சமர்ப்பிக்கவுள்ளார்.

இதேவேளை இலங்கை பிரதிநிதிகள் குழுவில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் உள்ளடங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த அமர்வின்போது, இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கு, இலங்கை தொடர்பான முக்கிய குழு ஏற்பாடுகளை செய்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே முன்மொழியப்பட்ட தீர்மானத்தை இலங்கை உரிய முறையில் பின்பற்றவில்லை என்பதன் காரணமாகவே புதிய தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.

இதற்கிடையில், இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஸ்பி பிளஸ் வரி சலுகையை இலங்கை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் எச்சரித்துள்ளார். 

மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என அண்மையில் சீனா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!