பாகிஸ்தானில் கடும் வெள்ளம்: பிரித்தானிய மகாராணி ஆறுதல்!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்தில் 1000க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருப்பதற்கு பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் தனது ஆழ்ந்த வருத்ததை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் ஜூன் நடுப்பகுதியில் இருந்து பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஏறக்குறைய 300,000 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, மேலும் ஏராளமான சாலைகள் செல்ல முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டு இருப்பதுடன், பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.
    
பல்வேறு பகுதிகளில் புதிய இறப்புகள் பதிவாகி வருவதால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 1,061 பேரை எட்டியுள்ளது.

இந்த நிலையில், 1,000க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றது மற்றும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வீடுகளை சேதப்படுத்திய பாகிஸ்தானின் வரலாறு காணாத கனமழையால் தாம் மிகவும் வருத்தப்படுவதாக பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்விக்கு அனுப்பிய கடிதத்தில், பாகிஸ்தான் முழுவதும் வெள்ளத்தால் ஏற்பட்ட துயரமான உயிர் இழப்பு மற்றும் அழிவைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த பயங்கரமான நிகழ்வுகளில் இருந்து நீங்கள் மீண்டு வரும்போது பிரித்தானியா பாகிஸ்தானுடன் ஒற்றுமையாக நிற்கும் எனத் தெரிவித்தார்.மேலும் எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்ட அனைவருடனும், மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவாக கடினமான சூழ்நிலைகளில் பணிபுரிபவர்களுடனும் உள்ளது என தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!