சந்திரகாந்தன் மட்டக்களப்பின் சாபக்கேடு!

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சாபகேடாக சந்திரகாந்தன் உள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றில் புதன் கிழமை இடம்பெற்ற பிள்ளைகள் மற்றும் தாய்மார்கள் மந்தபோசணை தொடர்பான சபை ஒத்திவைப்பு இரண்டாவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த நாட்களில் வெளிநாட்டிற்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு அந்நாடுகளின் அரசியல் தரப்பினர்,இலங்கையர்களுடன் சந்திப்பில் ஈடுப்பட்டேன். முன்னேற்றமடைந்துள்ள நாடுகள் அதிகாரத்தை பகிர்ந்தளித்துள்ளன,புலம் பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அதிகார பகிர்வு அவசியமானது.

கடந்த நாட்களில் வெளிநாடுகளில் முக்கிய தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தேன்.எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளில் அரசியலில் தொடர்புமில்லாமல் உள்ள இரண்டாம் தரப்பினருடன் ஒன்றிணைந்து இலங்கைக்கான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.காணி விவகாரத்திற்கு பிரச்சினை, அரசியல் கைதிகள் விடுதலை,அதிகார பகிர்வு ஆகியவற்றுக்கு தீர்வு அவசியமாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சாபகேடு. மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. பாடசாலைகளும் இராணுவம் வசமுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது. இவ்வாற நிலையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் கட்சி மாநாட்டிற்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை மட்டக்களப்புக்கு வரவேற்றுள்ளார்.
தனது சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாத நிலையில் நாமல் ராஜபக்ஷ உள்ளார்.

அவ்வாறிருக்கையில் நாமல் ராஜபக்ஷவை மேடைக்கேற்றி மட்டக்களப்பு மாவட்ட மக்களை தரம் குறைத்துள்ள சந்திரகாந்தனை சபையில் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாமலிருந்திருந்தால் அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு தமிழ் பிரதிநிதித்துவம் கூட கிடைத்திருக்காது. கல்முனை பிரதேச செயலக பிரிவு குறித்து விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுப்போம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!