இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்திக்கு நாடாளுமன்றில் அஞ்சலி

இராணுவத்தால் யாழ்ப்பாணம் – செம்மணியில் வைத்து கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சுண்டிக்குளி மகளிர் கல்லூரி உயர்தர மாணவி கிருஷாந்தி குமாரசுவாமிக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியது.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற “பிள்ளைகள், தாய்மாரின் மந்தபோசணை” தொடர்பாக யுனிசெப் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாவது நாள் விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அஞ்சலியைச் செலுத்தினார்.

யாழ்ப்பாணம் செம்மணியில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டது.


1996ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி செம்மணிப் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

கிருசாந்தியை தேடிச் சென்ற தாய் ராசம்மா, தம்பி பிரணவன் (வயது 16), குடும்ப நண்பரும் அயலவருமான சிதம்பரம் கிருபாமூர்த்தி (வயது-35, தென்மராட்சி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க உதவியாளர்) ஆகியோர் கிரிசாந்தியை தேடி சென்ற நிலையில் அவர்களும் இராணுவத்தினரால் படுகொலை படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டனர்.

கிருஷாந்தியையும் அவரைத் தேடிச் சென்ற நிலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் உறவினர்களையும்  26ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!