அதி முக்கிய அறிவிப்பை வெளியிடவிருக்கும் பிரதமர் லிஸ் ட்ரஸ்!

எகிறும் எரிவாயு மற்றும் மின் கட்டணம் தொடர்பில் அதிரடி அறிவிப்பு ஒன்றை புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் நாளை அறிவிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் நாளை அதி முக்கிய அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
   
குறித்த அறிவிப்பில், அடுத்த 2024 பொதுத் தேர்தல் வரை எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களின் விலை வரம்பு முடக்கப்படும் என்பதை உறுதிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஆண்டுக்கு 2,500 பவுண்டுகள் என்ற எரிசக்தி கட்டணங்களின் விலை வரம்பு முடங்க வாய்ப்புள்ளது. மட்டுமின்றி, வீடுகள் மற்றும் வணிகங்களுக்கு குறைந்த விலையை அமுலுக்கு கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த திட்டமானது 6 மாதங்கள் வரையில் அமுலில் இருக்கும் என கூறப்பட்டாலும், அடுத்த ஆண்டு இறுதி வரையில் எரிசக்தி கட்டணங்கள் அதிகரித்தே காணப்படும் என்பதால், குறித்த திட்டமும் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அக்டோபர் தொடங்கி எரிசக்தி கட்டணமானது 3,500 பவுண்டுகள் என அதிகரிக்கவிருக்கும் நிலையில், புதிய அரசாங்கத்தின் துரித நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும் என லிஸ் ட்ரஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

மேலும், வணிகங்களுக்கும் அரசாங்கம் உதவ முன்வர இருக்கிறது. அதிகரித்துள்ள எரிசக்தி கட்டணங்களால் 10ல் 7 மதுபான விடுதிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், எரிசக்தி கட்டணம் தொடர்பில் சிறு வணிகங்களுக்கான புதிய விலை வரம்பு அறிமுகப்படுத்தப்படலாம் என தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!