பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக ஐ.நாவில் குரல் கொடுக்கும் முஸ்லிம் புலம்பெயர் சமூகம்

இலங்கையில் பயங்கரவாத தடை சட்ட நடைமுறைக்கு எதிராக முஸ்லிம் புலம்பெயர் சமூகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யத் தீர்மானித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தும் விதம் ஏமாற்றமளிப்பதாக முஸ்லிம் புலம்பெயர் சமூகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 51ஆம் அமர்வு ஆரம்பமாக உள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தினை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து குரல் எழுப்பப்பட வேண்டுமென இலங்கை புலம்பெயர் முஸ்லிம் பேரவையின் சர்வதேச விவகார இணைப்பாளர் அயூப் அஸ்மின் ஆங்கில பத்திரிகையொன்றுக்குத் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவதனை தமது அமைப்பு எதிர்ப்பதாக இவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 300க்கும் முற்பட்ட முஸ்லிம் இளைஞர் யுவதிகள் பல மாதங்களாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என இவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொறுப்பு கூறுதல், இனங்களுக்கு இடையில் சகவாழ்வு, நல்லிணக்கம் போன்றவற்றை ஏற்படுத்துமாறு இலங்கையை சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!