தாமரை கோபுரத்தை சுற்றிப்பார்க்க ஆசைப்படும் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரம் இன்று முதல் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுகிறது.தாமரை கோபுர நிர்மாணப் பணிகள் கொழும்பு மத்திய பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன.சுமார் 7 வருடங்களில் இது தெற்காசியாவிலேயே பெரிய கோபுரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று முதல் நாட்டு மக்கள் அனைவரும் தாமரை கோபுரத்தினை நேரில் சென்று பார்வையிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.அதன்படி மக்கள் கோபுரத்தின் தரை தளத்தில் அனுமதிச் சீட்டினை பெற்று பார்வையிட முடியும்.

அதன்படி 10 வயதிற்கு குறைந்தவர்களுக்கு 200 ரூபா முதல் 500 ரூபா வரையிலும், ஏனையவர்களுக்கு 500 ரூபா முதல் 2000 ரூபா வரையிலும் அனுமதிச் சீட்டுக்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான போலி அனுமதிச் சீட்டு நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

சர்ச்சைக்குள்ளான குறித்த போலி அனுமதிச் சீட்டில் தமிழ் மொழி புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளமை மற்றும் சீனப் பிரஜைகள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறித்து சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

என்றபோதும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவது போலி நுழைவுச்சீட்டு என கொழும்பிலுள்ள இலங்கைக்கான சீன தூதரகம் நேற்று அறிவித்திருந்தது.அதன்படி “நாளை முதல் தாமரை கோபுரத்திற்குச் சென்று, நுழைவுச்சீட்டுக்களை வாங்கி உங்கள் கண்களால் நீங்களே இதனை பார்த்துக் கொள்ளுங்கள்” எனவும் நேற்றைய தினம் இலங்கைக்கான சீன தூதரகத்தால் டுவிட்டரில் பதிவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!