வீழ்ச்சிக்கு பொறுப்புக் கூறவேண்டியது நிதி அமைச்சும் மத்திய வங்கியுமே!

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும் நாடு இந்த நிலைக்கு தள்ளப்படுவதற்கும் பிரதானமாக பொறுப்புக்கூறவேண்டியது நிதி அமைச்சும் மத்திய வங்கியுமாகும். இதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புக்கூற வேண்டியதில்லை. அதனால் இந்த இரண்டு நிறுவனங்களையும் பூரணமாக மறுசீரமைக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இலங்கையை ஆசியாவில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் ஜனாதிபதியின் இலக்கை பயணிக்க முடியாமல் போகும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

    காலியில் அவரது அரசியல் கட்சி காரியாலயத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சரியாக இருந்தால் முடியுமாளவு அமைச்சர்களை நியமிப்பதுடன் பாராளுமன்றத்தில் 225பேரையும் இதில் இணைத்துக்கொள்ள வேண்டும்.

ஒருசிலருக்கு அமைச்சு பதவி இல்லாவிட்டாலும் வேறு குழுக்களின் இருந்து நடவடிக்கைகளை மேற்காெண்டு நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல இருக்கின்றது. அது அரசியலமைப்பின் 27ஆவது சரத்தை பாதுகாப்பதாகும். அரச கொள்கை மற்றும் அடிப்படை விதிகளை செயற்படுத்துவது பாராளுமன்ற பிரதிநிதிகளின், ஆளும், எதிர்க்கட்சி அனைவரதும் பொறுப்பாகும்.

அப்படியானால் அரச கொள்கை மற்றும் அடிப்படை விதிகளை முறையாக செயற்படுத்துவதற்கு முடியாமல் போனால் அது ஜனநாயகத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தலாக அமையும்.
உதாரணமாக கடந்த காலத்தில் இடம்பெற்றது இவ்வாறான ஜனநாயகத்துக்கான அச்சுறுத்தலாகும். இவ்வாறான அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்துவது முக்கியமாகும். அவ்வாறு இல்லாவிட்டால் பொருத்தமில்லாத குழுவொன்றின் கையில் நாட்டை ஒப்படைப்பதுதான் சர்வதேசத்தின் தேவையாகும்.

இலங்கையர்களாக நாங்கள் சர்வதேசத்துடன் போட்டியிடுவதை தடுப்பதே சர்வதேசத்தின் எதிர்பார்ப்பாகும். அதனை நிறுத்த நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து சர்வதேசத்துடன் போட்டியிடவேண்டும். அத்துடன் பாராளுமன்றத்தில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் பிரதான பொறுப்பாக இருப்பது அரச நிதி கொள்கை தொடர்பான பொறுப்பாகும்.

அது அரசியலமைப்பின் 148, 149, 150 மற்றும் 151ஆவது சரத்துக்களாகும். எமக்குள் இருக்கும் பிளவுகள் காரணமாக இந்த சரத்துக்கள் இன்று மீறப்பட்டுள்ளன. இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புக்கூற வேண்டியதில்லை. இதற்காக பொறுப்புக்கூற வேண்டியது அரச பொறிமுறையில் இதனை செயற்படுத்தியவர்கள்.
அதனால் இவர்களை முறையாக பயிற்றுவித்து மீண்டும் சரியான வழிக்கு கொண்டுவந்து வேலை வாங்கவேண்டும். இந்த விடயத்தை நான் தெரிவித்தபோது ஒருசிலர் குறுகிய அரசயல் நோக்கத்துக்காக, ஒருசிலரின் பெயரை குறிப்பிட்டு விமர்சிக்க ஆரம்பித்தனர்.

இதுதொடர்பில் நான் பொறுப்பில்லை. ஏனெனில் நான் அரசியலமைப்பின் பிரகாரம் உண்மையை தெரிவித்தேன். சத்தியத்தை தோல்வியடையச்செய்ய முடியாது. மேலும் இலங்கையை இன்று இந்த நிலைமைக்கு கொண்டுவர பிரதானமாக பொறுப்புக்கூறவேண்டி நிறுவனங்கள்தான் நிதி அமைச்சும் மத்திய வங்கியுமாகும்.

அதனால் அந்த நிறுவனங்களில் பூரண மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும். எதிர்காலம் ஒன்றை நாங்கள் எதிர்பார்ப்பதாக இருந்தால் செயற்திறமையற்ற அரச பொறிமுறை மறுசீரமைக்கப்பட வேண்டும். மாற்றம் ஏற்படவேண்டும்.

அப்போதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைப்பதுபோல் இலங்கையை ஆசியாவில் உயர்ந்த நிலையில் வைக்க முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் அவரின் இலக்கையும் வழிகாட்டலையும் அழிவடையச்செய்யும் பிரதான நிறுவனமாக இவை அமைந்துவிடும். அதில் இருந்து அந்த நிறுவனங்களை பாதுகாத்துக் கொள்வது எமது பாெறுப்பாகும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!