குருந்தூர் மலை நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு!

குருந்தூர் மலையிலே தண்ணி முறிப்பு பகுதியிலே 632 ஏக்கர் நிலங்களை தொல்லியல் திணைக்களம் எந்தவித சட்ட பூர்வமான ஏற்பாடுகளும் இன்றி அபகரித்து தமிழர் தாயகத்தை கூறு போடுகின்ற செயற்பாட்டுக்கு எதிராக, கிராம மக்கள், கிராம பொது அமைப்புக்கள் இன்று காலை 9 மணியிலிருந்து ஆரம்பிக்கின்ற தொடர் போராட்டத்திற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
    
இது தொடர்பில் இணைப்பாளர் வேலன் சுவாமிகள் கருத்து தெரிவிக்கையில்,
காலம் காலமாக மரபு வழியாக நாங்கள் வாழ்ந்து வந்திருக்கக்கூடிய எங்களுடைய தாயகம், வடக்கு, கிழக்கு இணைந்த எங்களுடைய தாயக்கத்தை கூறு போடுகின்ற முயற்சியாக வடக்கு கிழக்கின் எல்லைப் பகுதியாக இருக்கக்கூடிய முல்லைத்தீவு குருந்தூர் மலை,குமிழமுனை தண்ணி முறிப்பு பிரதேசம். அங்கு இருக்கும் ஆதிசிவன் ஜய்யனார் ஆலயத்தை முற்றுமாக அகற்றி ,பௌத்த விகாரையை நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி தொல்லியல் திணைக்களம் இரவோடிரவாக கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் விவசாயத் திணைக்களம், போன்ற எந்த ஒரு திணைக்களங்களின் அனுமதியும் இல்லாமல் களவாக , 632 ஏக்கர் நிலத்தை எடுத்திருக்கின்றது.

தொல்லியல் திணைக்களம் என்ற போர்வையிலே தமிழர்களுடைய பூர்வீக நிலங்கள் அபகரிப்பு செய்வதை, நில அபகரிப்பு செய்யப்படுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நில உரிமை, மத வழிபட்டு சுதந்திரம் என்பன முற்றாக மறுக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த நிலையில் நீண்ட காலமாக குறுந்தூர் மலை விவகாரம் மதத்தின் வழிபாட்டு சுதந்திரத்தை பாதிக்கக்கூடிய விதத்திலே ஈடுபட்டு வருவதும், நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கி இருக்கக் கூடிய நிலையிலே மீண்டும் மீண்டும் அவற்றை மீறி அந்த அநீதியை இழைக்கின்ற இந்த செயற்பாட்டை தமிழர்களாகிய நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது .

எங்களுடைய தாயக விடுதலைக்காக எத்தனையோ உயிர்களை தியாகம் செய்யப்பட்டிருக்கின்றன. எத்தனையோ அர்ப்பணிப்புகள் எல்லாம் இந்த மண்ணிலே நடைபெற்று கொண்டிருக்கின்ற சூழ்நிலையிலே, தாயகத்தை கூறு போடுகின்ற, செயற்பாட்டிற்கு எந்த ஒரு ஈழத் தமிழனும் அனுமதிக்க மாட்டான்.

இதனை முற்று முழுதாக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். அதற்காக கட்சி பேதமின்றி ,அமைப்புகள் பேதமின்றி ,மத பேதமின்றி அனைவரும் தமிழர்களாக நாளைய தினம் காலை 9 மணிக்கு அந்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறு அனைத்து உறவுகளையும் பொத்துவில் தொடக்கம் போலி கண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அன்புடன் அழைத்து நிற்கின்றது.

நாங்கள் அனைவரும் தமிழர்களாக அங்கே ஒன்று திரளுவோம். எங்களுடைய நிலத்தை நாங்களே ஆளக்கூடிய உரிமையை வெல்வதற்கு எங்களுடைய நிலங்களை பாதுகாக்க வேண்டும். அதற்காக நாங்கள் அனைவரும் ஒன்று திரலுவோம் என இந்த சந்தர்ப்பத்திலே அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.

அதுமட்டுமன்றி சர்வதேசம் இந்த விடயத்தில் தலையிட்டு அழுத்தத்தைப் பிரயோகித்து, இவ்வாறான நில ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.தமிழர் தாயகத்திலே நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.என்பதற்கு அனைத்து சர்வதேசமும், சர்வதேச அமைப்புக்களும், நாடுகளும் ,பொது அமைப்புகளும் அழுத்தத்தை சிறிலங்கா சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கு கொடுத்து நிறுத்த வேண்டும்.

பௌத்த பேரினவாதத்தை நாங்கள் முற்றுமுழுதாக எதிர்த்து கடந்த 75 வருடங்களாக போராடிக் கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையிலே, எங்களுடைய மக்கள் விழிப்படைய வேண்டும். எங்களுடைய மக்கள் உண்மையை உணர்ந்து அனைவரும் ஒற்றுமையாக இதற்கு எதிரான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் எங்களுடைய இனத்தினுடைய விடுதலையும், எங்களுடைய தாயகத்திலேயே நாங்கள் சுய நிர்ணய உரிமையோடு வாழக்கூடிய சுதந்திர தேசம் மலருகின்ற நிலை ஏற்படும்.

ஆகவே நாளைய தினம் நடைபெற இருக்கின்ற குருந்தூர் மலை தண்ணீர் முறிப்பு பகுதியில் நடைபெற இருக்கின்ற தொடர் போராட்டத்திற்கு அனைத்து மக்களும் முழுமையான ஆதரவை தெரிவித்து அங்கு வருகை தந்து போராட்டத்தில் பங்கெடுத்து எங்களுடைய உரிமையை நிலைநாட்ட வேண்டும். என்று அனைவரையும் நாங்கள் அன்போடு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் வேண்டி நிற்கின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!