கோட்டாபய பதவி விலகியமை தொடர்பில் விமர்சனங்கள் உள்ளன-நாமல் ராஜபக்ச

பல்வேறு காரணங்களால் சமூகம் ஒன்று வீழ்ச்சியடைந்துள்ள சந்தர்ப்பத்தில் நாடு வீழ்ச்சியடைந்தால், நாட்டை மீட்டெடுப்பது சிரமம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் விமல வீர திஸாநாயக்க ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.

கோட்டாபய துப்பாக்கிகளை பயன்படுத்தி போராட்டகாரர்களை அடக்க தயாராக இருக்கவில்லை


கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலகியமை தொடர்பில் பலருக்கும் விமர்சனங்கள் இருக்கின்றனர். எம்மில் பலருக்கும் அப்படியான விமர்சனங்கள் இருக்கின்றன. நான் அதனை வேறு விதமாக பார்க்கின்றேன்.

88, 89 ஆம் ஆண்டுகளில் அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவை போல் சுமார் 60 ஆயிரம் இளைஞர்களை கொலை செய்து கோட்டாபய ராஜபக்சவும் இதனை அடக்கி இருக்கலாம்.

ஜனாதிபதி மாளிகைக்குள் வரும் போது தாக்குதல், நடத்தி, துப்பாக்கிச் சூடு நடத்தி அடக்கி இருக்கலாம். எனினும் கோட்டாபய ராஜபக்ச அப்படி செய்ய தயாராகவில்லை. ஜனாதிபதி மாளிகைக்கு நுழையும் போது துப்பாக்கிச் சூடு நடத்தி, தாக்குதல் நடத்தி அடக்கி இருந்தால், அரசாங்கம் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

நீங்கள் வழங்கிய வாக்குரிமை உறுதியாகி இருக்கும். எனினும் நாட்டில் இளைஞர் எழுச்சி ஏற்பட்டு நாடு வீழ்ச்சியடையும். அரசாங்கத்தை பாதுகாப்பதா நாட்டை பாதுகாப்பதா என்ற இரண்டு மாற்று வழிகளில் ஒன்றே கோட்டாபய ராஜபக்சவுக்கு இருந்தது.

வீழ்ச்சியடைந்த அரசாங்கத்தை மீண்டும் அமைக்கலாம் நாடு வீழ்ச்சியடைந்தால் கட்டியெழுப்புவது சிரமம்

அரசாங்கத்தை எம்மால் கட்டியெழுப்ப முடியும் ஆனால், வீழ்ச்சியடைந்த நாட்டை கட்டியெழுப்புவது கஷ்டமானது. குறிப்பாக சமூகம் வீழ்ச்சியடைந்துள்ள சந்தர்ப்பத்தில், நாடு வீழ்ச்சியடைந்தால், நாட்டை கட்டியெழுப்புவது சிரமம்.

இதனால், 69 லட்சம் மக்களின் ஆணையை பொருப்படுத்தாது, அரசாங்கம் வீழ்ச்சியடைந்தால், பரவாயில்லை நாடு பாதுகாப்பட வேண்டும் என்று அவர் தீர்மானித்தார்.

பாதுகாக்கப்பட்ட நாட்டிற்குள் வீழ்ச்சியடைந்த அரசாங்கத்தை உங்களால் மீண்டும் உருவாக்க முடியும். எமது அரசாங்கம் பல பாரிய வேலைத்திட்டங்களை செய்தது. எனினும் மக்களுக்கு சார்பாக இருந்து எடுத்த சில தீர்மானங்கள் தவறிப்போயின. உதாரணமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மக்களுக்கு 350 ரூபாவுக்கு இரசாயன பசளையை வழங்கினார்.

எனினும் கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நல்ல நோக்கத்தில் மக்கள் விஷத்தன்மை உணவுகளை உட்கொள்வதை தடுக்கும் நோக்கில் இரசாயன பசளை இறக்குமதியை நிறுத்தி இயற்கை பசளை பயிர்செய்கை முன்னெடுக்க தீர்மானித்தார். அமைச்சரவையில் நாங்கள் இந்த தீர்மானத்தை மாற்ற முயற்சித்தோம். எனினும் முடியாமல் போனது.

எமது அந்த தவறான முடிவு காரணமாக குறிப்பாக அம்பாறை மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அரசியல் கட்சி என்ற வகையில் அது குறித்து நாங்கள் வருத்தப்படுகின்றோம்.
பின்னர் அந்த தவறை திருத்தினாலும் நாங்கள் அதனை செய்ய மிகவும் தாமதித்து விட்டோம். சில இடங்களில் எமது கட்சியினருக்கு உதவிகளை செய்ய முடியாமல் போனது. அனைவரையும் ஒரே விதமாக உபசரிக்க முயற்சித்தமையே இதற்கு காரணம்.

அரசியல் கட்சிகள் என்ற பாரபட்சம் பார்க்காமல் பணியாற்றுமாறு ஜனாதிபதி கோட்டாய கூறினார். நாங்கள் அப்படி செய்யாவிட்டாலும் சில கட்சிகள் மற்றும் அதிகாரிகள் கட்சியினருக்கு மாத்திரமே வேலை செய்தனர்.

எவ்வாறாயினும் நாம் எமது தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்போம் எனவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!