போதைப்பொருளை கட்டுப்படுத்த புதிய விசேட செயலணி!

போதைப்பொருளைக் கொண்டு வருதல், விநியோகித்தல், விற்பனை செய்தல் மற்றும் பாவனை செய்தல் போன்றவற்றை ஒடுக்குவதற்கு புதிய விசேட செயலணியொன்று நியமிக்கப்படும் என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் பாவனை, வைத்திருத்தல் மற்றும் விநியோகித்த குற்றங்களுக்காக பெருமளவானோர் கைதுசெய்யப்பட்டுள்ள காரணத்தினால் சிறைச்சாலைகளில் நெரிசல் அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இவ்வாறான நபர்களை மீண்டும் சமூகத்துடன் இணைக்கும் வகையில் அவர்களை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்புவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில், அவற்றின் ஆபத்துக்கள் குறித்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கல்வி புகட்டுவது உள்ளிட்ட தேசியகொள்கையொன்றை வகுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!