“ராஜராஜ சோழன் காலத்தில் இந்தியாவும் இல்லை, இந்து மதமும் இல்லை” – சீமான்!

ராஜராஜ சோழன் காலத்தில் இந்தியாவும் இல்லை, இந்து மதமும் இல்லை என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கனமழைக்கு நடுவே நடைபெற்ற இந்த கூட்டத்தில் மழையையும் பொருட்படுத்தாமல் கட்சியினரோடு மழையில் நனைந்தபடி சீமான் அமர்ந்திருந்தார்.

மேடையில் இறுதியாக உரையாற்றிய சீமான், குடிவாரி கணக்கெடுப்புதான் சாதி ஒழிப்பிற்கான முயற்சி. சாதிவாரி கணக்கெடுப்பும், மொழிவாரி கணக்கெடுப்பும் எடுக்க வேண்டும், குடிவாரி கணக்கெடுத்து இட ஒதுக்கீடு வழங்குங்கள். நாடு முன்னேறுகிறது என மோடி பேசும் பொய்யை விட திமுகவினர் பேசும் சமூகநீதி என்பது பெரிய பொய்.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை எனக் கூறும் அண்ணாமலை, மோடி 8 ஆண்டாக எதுவும் செய்யவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய சீமான், ‘அவசரப்பட்டு ஐபிஎஸ் வேலையை விட்டுட்டு வந்துட்டாரு அண்ணாமலை. இரண்டு வருடத்தில் அண்ணாமலையை பாஜகவினர் விரட்டிவிடுவார்கள். அண்ணாமலையிடம் தயவுசெய்து கேட்கிறேன், ஹெச்.ராஜாவிற்கு ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவி வாங்கிக் கொடுத்துவிடுங்கள். காரைக்குடியில் ஒரு ஆளுநர் என இட ஒதுக்கீடு வழங்கி ஹெச்.ராஜாவிற்கு நான் சிபாரிசு செய்கிறேன்’ என்று கூறினார்.

மேலும், ‘ராஜராஜ சோழன் காலத்தில் இந்தியாவும் இல்லை, இந்து மதமும் இல்லை. வரலாற்றில் ராஜராஜ சோழன் சைவ மரபினர் என்றுமே உள்ளது. வீர சைவரான எங்களை ஏன் இந்து என மதம் மாற்றுகிறீர்கள்’ என்ற அவர், குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் சமூக நீதி குறித்து பேசக்கூடாது, தமிழக அரசு குடிவாரி கணக்கெடுத்து கல்வி, வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!