யாழில் முதன்முறையாக ஆரம்பிக்கப்படவுள்ள ஒருநாள் சேவை

வாகன உடமை மாற்றம் தொடர்பான ஒருநாள் சேவையினை (One day Service) யாழ்ப்பாண மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் ஆரம்பிப்பதற்கான அனுமதி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக யாழ். மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள இவ் ஒருநாள் சேவை எதிர்வரும் 2022.10.22ஆம் திகதி காலை 11 மணிக்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்க ஆணையாளர் நாயகத்தினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 2022.10.25ஆம் திகதி முதல் பொதுமக்கள் இச்சேவையினை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் சாதாரண சேவையில் உடமை மாற்றத்திற்காக சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களுக்கு மேலதிகமாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களையும் இணைத்து உடைமை மாற்றப் படிவங்களை நேரில் வந்து சமர்ப்பிப்பதன் மூலம் ஒருநாள் சேவையினை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் சேவையில் உடைமை மாற்றத்தினை செய்வதற்கு தேவையான மேலதிக ஆவணங்கள்

1. உரிமை மாற்றிக் கொடுப்பவரின் தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றில் யாதேனும் ஒன்றின் நிழற்பிரதி, மாற்றிக் கொடுப்பவரின் பிரிவின் கிராம அலுவலரினால் அல்லது மாற்றிக் கொடுப்பவரின் பிரதேச சமாதான நீதவானினால் உறுதிப்படுத்துதல் வேண்டும்

2. குறித்த வாகனத்தை புதிய உரிமையாளருக்கு உரிமை மாற்றிக்கொடுப்பதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்பதை தெரிவிக்கும் கடிதம். இக்கடிதத்தில் வாகன இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வதிவிட முகவரி என்பன தெளிவாக குறிப்பிடப்பட்டு , மாற்றிக் கொடுப்பவரின் பிரிவின் கிராம அலுவலரினால் அல்லது மாற்றிக் கொடுப்பவரின் பிரதேச சமாதான நீதவானினால், உரிமை மாற்றில் கொடுப்பவர் அவரின் முன்னிலையில் கையொப்பமிட்டாரென்று உறுதிப்படுத்தி கையொப்பமிட்டு, பெயருடன் கூடிய பதவி முத்திரை இடப்பட்டிருத்தல் வேண்டும்.

3. வாகனத்தை இறுதியாக ஒருநாள் சேவையில் உரிமை மாற்றிப்பெற்ற திகதியில் இருந்து ஆற மாதங்களை தாண்டியிருத்தல் வேண்டும்.

4. உரிமை மாற்றம் பெற்ற திகதி ஆறு மாதங்களுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.

5. உரிமை மாற்றிக் கொடுப்பவரும் உரிமை மாற்றிப் பெறுபவரும் நெருங்கிய உறவினர்களாயின் இருவரும் தேசிய அடையாள அட்டையுடன் நேரில் வருதல் வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!