அமைதியாக நடைபெற்று முடிந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல்!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் டெல்லி மற்றும் மநில தலைமை அலுவலகங்களில் நேற்று நடைபெற்றது. தேர்தலில், மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
    
கட்சியின் மாநில தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், தற்போதைய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என தமிழகம் முழுவதும் 711 பேர் வாக்காளர்கள் உள்ள நிலையில், நேற்று காலை 7 மணி முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவனில் குவியத் தொடங்கினர். காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரதாப் பானு சர்மா, உதவி தேர்தல் அதிகாரிகள் நெய்யாற்றின்கரை சனல், கர்நாடகாவை சேர்ந்த அஞ்சலி நிம்பல்கர் ஆகியோர் தேர்தலை முன்னின்று நடத்தினார்கள். காலை 10 மணி முதல் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

வாக்காளர்கள் அனைவருக்கும், கியூஆர் கோடுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு இருந்தது. இந்த வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை காண்பித்த பின்னரே வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். வாக்குச்சீட்டில் முதல் பெயராக மல்லிகார்ஜூன கார்கே பெயரும், 2-வது பெயராக சசி தரூரின் பெயரும் ஆங்கிலத்திலும், இந்தியிலும் அச்சிடப்பட்டு இருந்தது. வாக்காளர்கள் வாக்குச்சீட்டில் தாங்கள் வாக்களிக்க விரும்பும் நபரின் பெயரை டிக் செய்து வாக்குப்பெட்டியில் போட்டனர்.

நேற்று மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த உடன் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பெட்டியின் மேல் பாகத்தை மூடி கையெழுத்து இட்டு அவற்றை டெல்லி கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். எவ்வித பிரச்சினையும் இன்றி தேர்தல் மிகவும் அமைதியாக நடைபெற்று முடிந்தது. 95 சதவீதம் தேர்தலை முடித்து விட்டு வெளியே வந்த தலைமை தேர்தல் அதிகாரி பிரதாப் பானு சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:- தேர்தல் மிகவும் அமைதியாக நடந்து முடிந்தது. 711 வாக்காளர்களில் 662 பேர் வாக்களித்து இருந்தனர். இது 93 சதவீதம் ஆகும். இது தவிர தமிழகத்தை சேர்ந்த 10 அல்லது 12 பேர் பெங்களூர் மற்றும் டெல்லியில் வாக்களித்து உள்ளனர்.

அதனை சேர்க்கும்போது வாக்களித்தவர்களின் சதவீதம் 95 ஆக உயரும். காங்கிரஸ் கட்சி மட்டுமே ஜனநாயக முறைப்படி அடி மட்டத்தில் இருந்து அகில இந்திய தலைவர் பதவி வரை தேர்தலை நடத்தி உள்ளது. பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலை எப்படி நடத்துவார்கள்? இது கண்துடைப்பாகத்தான் இருக்கும் என்று கூறி வந்தவர்கள் இப்போது காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்ததை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!