சிவில் தலைவர்களை சிறைப்படுத்தவே புனர்வாழ்வு பணியக சட்டமூலம்!

மக்கள் பிரச்சினைகளுக்காக வீதிக்கிறங்கிய சிவில் தலைவர்களை சிறைப்படுத்தவே அரசாங்கம் புனர்வாழ்வு பணியகம் சட்டமூலத்தை கொண்டுவந்திருந்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இதனை உறுதிப்படுத்தி இருக்கின்றது. அத்துடன் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விடுதலை அளிக்கப்பட்டாலும் பூரண விடுதலை அல்ல. அதனால் அவருக்கு பூரண விடுதலை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
    
பாராளுமன்றத்தில் புதன்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்த புனர்வாழ்வு பணியகம் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் என்றும் அதில் உள்வாங்கப்பட்டிருக்கும் போராட்டக்காரர்கள் வன்முறையாளர்கள் என்ற வாசகங்கள் நீக்கப்படவேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி வீதிக்கிறங்கிய சிவில் அமைப்பு தலைவர்களை சிறைப்படுத்தி, அரச மிலேச்சத்தனம் அரச பயங்கரவாதத்தை செயற்படுத்தவே இந்த சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவந்தது.

அதனால் அரசாங்கம் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கு தயார் என்றால், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் மாணவர்களை விடுதலை செய்யவேண்டும்.

மக்களின் பிரச்சினைக்காக வீதிக்கிறங்கியது பயங்கரவாதமா? அதனால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நல்லிணக்க இணக்கப்பாட்டுகளுக்கமைய கைதுசெய்யப்பட்டிருக்கும் அவர்களின் விடயத்தில் இலகு முறையை கடைப்பிடிக்குமாறு தெரிவிக்கின்றேன்.

அதேநேரம் பயங்கரவத தடைச்சட்டத்தை முற்றாக வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கின்றேன். அத்துடன் நாட்டின் தேசிய பாதுகாப்புக்காக வேறு வேலைத்திட்டங்களும் அவசியமாகும்.

அதேவேளை, ரன்ஜன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருக்கின்றது. அதற்காக நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம். ஆனால் அவருக்கு அரைவாசி விடுதலையே வழங்கப்பட்டிருக்கின்றது. ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அரசியலில் ஈடுபட முடியாது.

தேர்தலில் கலந்துகொள்ள முடியாது. வாக்களிக்க முடியாது. அவர் பூரண பிரஜை அல்ல. அதனால் காலவரையரை ஒன்றை ஏற்படுத்தி, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பூரண விடுதலை வழங்குவுதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!