இணையத்தள விளம்பரம் மூலம் மில்லியன் கணக்கில் மோசடி-இளைஞன் கைது

இலத்திரனியல் உபகரணங்கள், கணனி, செல்போன் உட்பட டிஜிட்டல் மென்பொருட்களை கொரியாவில் உள்ள நிறுவனத்தின் விலைக்கே வழங்குவதாக கூறி, “மலிவு விலையில் பொருள்” என்ற பெயரில் இணையத்தளம் ஒன்றை நடத்தி, மக்களிடம் லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த 23 வயதான இளைஞனை குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் ஆய்வுக்கூட அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.

காலி ஹபராதுவ அகுலுகல பிரதேசத்தை சேர்ந்த உதார சாமிக என்ற இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மிக மோசமாக போதைப் பொருளுக்கு அடிமையானவர் என விசாரணைப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பொருட்களின் சந்தை விலையை விட மிக குறைந்த விலையில் டிஜிட்டல் இலத்திரனியல் பொருட்களை இறக்குமதி செய்து தருவதாக கூறி தனது இணையத்தளம் சம்பந்தமான முகநுல் பக்கத்தில் விளம்பரத்தை வெளியிட்டு, சந்தேக நபர் இந்த மோசடியை செய்து வந்துள்ளார்.

எல்.ஈ.டி. தொலைக்காட்சி 7 ஆயிரம் ரூபாவில் இருந்தும், மடிக்கணனிகள் 19 ஆயிரம் ரூபாவில் இருந்து விற்பனை செய்யப்படும் என மிக கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, அதனை போலி கணக்கை பயன்படுத்தி தனது முகநூலில் பிரசாரம் செய்து வந்துள்ளார்.

கொள்வனவாளர்கள் கொள்வனவு செய்யும் பணத்தை வைப்புச் செய்ய இரண்டு வங்கிக்கணக்குகளை வழங்கியுள்ள சந்தேக நபர், ஆறு மாதங்களாக இந்த மோசடியை செய்து வந்துள்ளார்.

இந்த மோசடி சம்பந்தமாக நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆறு மாத காலத்தில் சந்கே நபர், நாடு முழுவதிலும் பல நபர்களிடம் இருந்து 56 லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் வழங்கிய வங்கிக்கணக்கு அனுரெஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் சந்தேக நபரின் காதலி எனக் கூறப்படும் யுவதியின் உயிரிழந்த தாயாருடையது என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

விளம்பரத்தில் வெளியிடப்பட்ட தொலைபேசி இலக்கமும் உயிரிழந்த நபர் ஒருவரின் பெயரில் பெறப்பட்டது என தெரியவந்துள்ளது. வங்கிக்கணக்கில் வைப்புச் செய்யப்படும் பணத்தை சந்தேக நபர், பணம் மீளப்பெறல் அட்டையை பயன்படுத்தி பெற்றுக்கொண்டுள்ளார்.

அவ்வப்போது பலரை அனுப்பி இவ்வாறு பணத்தை எடுத்துள்ளார். இந்த மோசடியில் சந்தேக நபருடன் போதைப் பொருளை பயன்படுத்தும் சுமார் 12 பேர் கொண்ட குழுவும் சம்பந்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

,இது குறித்து குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் ஆய்வுக்கூட பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!