22ஆம் திருத்தச்சட்டத்தை ஆதரிப்பதில் கூட்டமைப்புக்குள் குழப்பம்

22ஆம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வாக்கொடுப்பு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சற்று முன்னர் கலந்துரையாடியுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் பங்காளி கட்சிகளும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இக் கூட்டத்தில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றியுள்ளனர். அவர்களில் நால்வர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என்ற கருத்தினை முன்வைத்துள்ளனர்.
ஒருவர் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்துள்ளார்.

ஏனைய இரு நாடாளுமன்ற  உறுப்பினர்கள் எவ்வித கருத்தினையும் தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்றைய கூட்டத்தில் பெரும்பாலானவர்களின் நிலைப்பாடு 22 சட்டமூலத்தை ஆதரிக்க வேண்டும் என்பதாக அமைந்துள்ளது.

19ஆம் திருத்தசட்டத்தை ஆதரித்து போன்றே 22ஆம் திருத்தச் சட்டத்தையும் ஆதரிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

“கட்சியில் உள்ள தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புக்காக இத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பது காலத்திற்கு பொருத்தமில்லை என்பதுடன் இத் திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிப்பது பொதுஜன பெரமுனவில் பசில் ராஜபக்சவை ஆதரிப்பதற்கு ஒப்பானது” என பங்காளி கட்சிகளின் தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன், வினோ நோகராதலிங்கம் மற்றும் சாணக்கியன் போன்றோர் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அத்துடன்,  22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன ஆதரவு வழங்கவுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்திருந்தார்.எனினும், தேவையற்ற திருத்தங்களை உள்ளடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படின் அதற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் தமது கட்சி அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

அதேவேளை, அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நேற்றையை நாடாளுமன்ற விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கடுமையாக விமர்சித்திருந்தாலும் இன்றைய வாக்கெடுப்பில் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு இன்னமும் தெரியவரவில்லை. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!